கடவுளோட ஆசி இருந்தா தமிழில் தொடர்ந்து பாடுவேன்! - காந்தக் குரல் ஜென்சியின் கம்பேக்

By காமதேனு

என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

எண்பதுகளின் இசை ரசிகர்களால் இன்றைக்கும் கொண்டாடப்படும் குரல் தேவதை ஜென்சி. ‘ஞான் ஞான் பாடணும்…’, ‘அடி பெண்ணே…’, ‘ஆயிரம் மலர்களே’, ‘என் வானிலே..’, ‘என்னுயிர் நீதானே’, ‘கல்யாணம் என்னை முடிக்க…’, ‘காதல் ஓவியம்’ என்று தமிழில் மொத்தமே ஐம்பது சொச்சம் பாடல்களை மட்டும் பாடியிருந்தாலும் அத்தனையும் தேன் ஹிட்டுகள். இளையராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட ஜென்சி, புகழின் உச்சத்தில் இருந்தபோதே திரையிசைப் பயணத்திலிருந்து திடீரென விலகியவர். 35 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தமிழுக்கு வருகிறார் என்ற தகவலே அத்தனை இனிமையாய் ஒலிக்க, நாகர்கோவிலில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருந்த அவரைச் சந்தித்தேன்.

    35 வருஷ இடைவெளிக்கு அப்புறம் மீண்டும் தமிழ்ல பாட வர்றீங்க. வாழ்த்துகள்!

ஆமா. எனக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கு. மியூசிக் டீச்சர் வேலையிலிருந்து ஒரு வருஷத்துக்கு முன்னால ரிட்டயர்டு ஆகிட்டேன். இப்ப, முன்ன மாதிரி நிறைய டைம் கிடைக்குது. மூணு வருசத்துக்கு முன்னாடி, ‘ஞான் ஸ்டீவ் லோப்பஸ்’ங்குற மலையாளப் படத்துல பாடினேன்.

சமீபத்துல, மகேந்திரன் சாரின் மகன் ஜான் மகேந்திரன் வந்து சந்திச்சார். அவர் இயக்கும் ’சரவெடி’ படத்துல ஒரு பாடல் பாடக் கேட்டார். தமிழ்ல பெரிய இடைவெளிக்கு அப்புறம் பாடறதுல சின்னத் தயக்கமும் இருந்துச்சு.  “தமிழ் ரசிகர்கள் என்னை முன்புபோல ரசிப்பாங்களான்னு தெரியலயே”ன்னு சொன்னேன்.    “காதல் ஓவியம் பாடல் மாதிரி இனிமையா இருக்கணும்ங்கறதுக்காகத்தான் உங்களைத் தேடி வந்தேன்”ன்னு சொன்னார். சந்தோஷமா சென்னைக்குக் கிளம்பி வந்துட்டேன்.

படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைச்சிருக்கார். தமிழ் ரசிகர்கள் என் பாடல்களை அப்படி ரசிக்கிறாங்க. அவங்களுக்காக மீண்டும் பாடறது எனக்குக் கெடைச்சிருக்கும் ரெண்டாவது வரம்.

சரி, உங்க பாடல்களுக்கு அவ்ளோ வரவேற்பு இருக்கும்போதே, திடீர்னு காணாமல் போனது ஏன்?

1978-ல், தமிழுக்குப் பாட வந்தேன். தொடர்ந்து ஐந்து வருஷம் பாடினேன். அந்த நேரத்துல கேரளாவுல அரசு இசைப் பள்ளியில இசை ஆசிரியர் வேலை கிடைச்சதால. ஜாயின் பண்ணினேன்.

அதுக்குப் பின்னாடியும்கூட தொடர்ந்து பாடிக்கிட்டுத்தான் இருந்தேன். ஆனா, சென்னையில வீடு எடுத்துத் தங்கலை. கேரளாவிலிருந்துதான் போயிட்டும் வந்திட்டும் இருந்தேன். இசை ஆசிரியர் பணியில முழு கவனம் செலுத்தத்தான் சின்ன பிரேக் எடுத்தேன். ஆனா, அது பெரிய பிரேக்காகிடுச்சு.

    இளையராஜா பார்வையில எப்படிப் பட்டீங்க? அவர் வாய்ப்புத் தந்தது எப்படி?

சின்ன வயசுல இருந்தே மேடை இசை நிகழ்ச்சிகளுக்குப் போக ஆரம்பிச்சுட்டேன். 15 வயசுலயே யேசுதாஸ் அண்ணனோட சேர்ந்து நிறைய புரோகிராம் பண்ணிருக்கேன். ஒரு தடவை யேசுதாஸ் அண்ணன்தான்,  “ஒரு பொண்ணு இருக்கா… வாய்ஸ் எப்படி இருக்குன்னு பாருங்க”ன்னு ராஜா சார்கிட்ட சொன்னாரு. திடீர்னு ஒருநாளு ராஜா சார் வாய்ஸ் டெஸ்ட்டுக்கு சென்னைக்கு வரச்சொன்னார். காலையில் வாய்ஸ் டெஸ்ட் முடிஞ்சு, மத்தியானமே ரெக்கார்டிங். அதுதான்  ‘திரிபுரசுந்தரி’ படத்துல வரும், ‘வானத்துப் பூங்கிளி’ பாட்டு. ஜானகியம்மாவோட சேர்ந்து பாடினேன். ராஜா சார் இசையில அறிமுகமானது நான் செஞ்ச புண்ணியம். அவர் ஒரு லெஜண்ட்!

  

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE