‘ஒரு கல் ஒரு கண்ணாடி... உடையாமல் மோதிக்கொண்டால் காதல்’ என்கிற ராஜேஷின் ‘எஸ்எம்எஸ்’ படத்தின் பாடல் வரி தான் ‘ Mr.லோக்கல்' கதை.
கார் விற்பனை நிறுவனத்தில் பணிபுரிகிறார் சிவகார்த்திகேயன். சீரியல் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார் நயன்தாரா. ஒரு சாலை விபத்தில் இருவருக்கும் மோதல் ஆரம்பிக்கிறது. சிவாவின் வேலையும் பறிபோகிறது. இந்தச் சூழலில் சிவாவின் மனசுக்குள் துளிர்க்கும் காதலை நயன் எப்படி ஏற்றுக்கொள்கிறார் என்று ராஜேஷ் படங்களின் டெம்ப்ளேட் பாணியில் பதில் சொல்கிறது திரைக்கதை.
தனது முந்தைய படங்களின் சாயலில் இருக்கும் காட்சிகளையே பிய்த்துப் போட்டு மிக்ஸியில் அடித்துக் கொடுத்திருக்கிறார் ராஜேஷ். படம் முழுக்கவே அவரது முந்தைய படங்களை நினைவூட்டிக்கொண்டே இருப்பதுதான் சோகம்.
நடனம், குறும்பு, நகைச்சுவையான பாடி லாங்வேஜ் என சிவகார்த்திகேயன் கலக்கியிருக்கிறார். ஆனால், ஒட்டுமொத்தமாக அவரது கதாபாத்திரம் மெச்சும்படியில்லை. நாயகியைத் துரத்துவது, டீஸ் செய்வது, அதன் மூலம் காதலிக்க வைப்பது என்ற ஃபார்முலாவில் கடுப்பேற்றுகிறார். கதாநாயகனுக்கான அம்சங்களில் தன்னைப் பொருத்திக்கொள்ளும் சிவா, கதைக்காக எப்போது பொருந்திக்கொள்வார்?