உறியடி 2 - திரை விமர்சனம்

By காமதேனு

பல நாடுகளால் தடை செய்யப்பட்ட பூச்சி கொல்லி மருந்து தயாரிக்கும் ரசாயன ஆலையைத் தமிழகத்தில் ஒரு கிராமத்தில் தொடங்குகிறார்கள். முறையான பராமரிப்பில்லாத ஆலையை, லஞ்சம் வாங்கிக்கொண்டு தொடர்ந்து இயங்க அனுமதிக்கிறார்கள் அதிகாரிககள். கெமிக்கல் இன்ஜினீயரிங் படித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருக்கும் விஜயகுமாரும், அவரது நண்பர்களும் சொந்த ஊரிலேயே இருக்கிற ரசாயன தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்கிறார்கள். தொழிற்சாலையில் ரசாயன வாயு கசிந்து, விஜயகுமாரின் நண்பர்களில் ஒருவர் உயிர் இழக்கிறார். பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட, ஆலை விபத்தை அரசியலாக்கி லாபம் பார்க்கிறார் உள்ளூர் சாதி தலைவர். மீண்டும் தொழிற்சாலை இயங்க ஆரம்பிக்கிறது. முறையான பராமரிப்பில்லாததால் ஒரு கட்டத்தில் தொழிற்சாலையிலிருந்து விஷவாயு பரவ, சுற்றியிருக்கிற கிராம மக்கள் சந்திக்கிற பிரச்சினைகளும் நடத்துகிற உணர்ச்சிப் போராட்டமும்தான் உறியடி II.

ரசாயன தொழிற்சாலையைச் சுற்றி நடக்கும் கதையில், அதன் பாதிப்பு பற்றி எளிய மக்களுக்கும் புரிகிற மாதிரி பார்வையாளர்களைக் கதையுடன் ஒன்ற வைத்ததற்கு இயக்குநருக்கு சபாஷ். தொழிற்சாலைக் காட்சிகளின் பிவின்குமாரின் ஒளிப்பதிவு அத்தனை தெளிவு. தொழிற்சாலை சம்பந்தமான காட்சிகள் அவ்வளவு கச்சிதமாக, ரசிகனை நெளிய வைக்காமல் அடுத்த காட்சிக்கான ஆர்வத்தைத் தூண்டுகிறது.

புதுமுகங்கள்  நிறைய  இருந்தாலும்  அத்தனை பேருமே கொடுத்த கதாபாத்திரங்களைக் கனகச்சிதமாகச் செய்திருக்கிறார்கள். சமூக அநீதிக்கு எதிராகவும், சாதி அரசியலையும் சாடியிருக்கிறார் இயக்குநர் விஜயகுமார்.

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என மாறி மாறி ஓட்டுப் போடுவதைவிட, பாதிக்கப்பட்டவர்களே நேரடியாகப் போட்டியிடுவதுதான் தீர்வு என மாற்று அரசியலுக்கான களத்தை முன்வைத்த விதம் பாராட்டத்தக்கது. “அரசியல்ல நாம தலையிடணும், இல்லேன்னா அரசியல் நம்ம வாழ்க்கையில தலையிடணும்” என்ற ‘உறியடி’ முதல் பாகத்தின் அடிநாதம், இந்தப் படத்தில் கொஞ்சம் கூடுதலாகவே சொல்லப்பட்டிருப்பது சிறப்பு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE