திருநங்கை வாழ்வு, விடலை பருவத்தில் எட்டிப் பார்க்கும் காமம், குடும்பத்தையே மறந்துவிட்டு கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் மனிதன், குடும்பத்தைக் காப்பாற்ற நீலப் படத்தில் நடிக்கும் குடும்பத் தலைவி, வக்கிரமான போலீஸ் அதிகாரி, இன்னொருவருடன் உறவுகொண்டு சிக்கலில் ஆழ்ந்துவிட்ட மனைவி எனப் பொதுவெளி கொச்சையாய் நினைக்கும் ரகசிய உலக மாந்தர்களின் வாழ்வியலைப் பேசி - கண்ண பரமாத்மாவின் கீதோபதேசத்தை மறைமுகமாகத் தொட்டு, இத்தனை பேருக்கும் முடிச்சுப் போட்டு முடிகிறது ‘சூப்பர் டீலக்ஸ்'.
ஆறரை ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டைவிட்டு ஓடிப் போன விஜய் சேதுபதியின் வருகைக்காக குடும்பமே காத்து நிற்கிறது. அவரோ திருநங்கையாய் வந்து நிற்கிறார். அதில் தொடங்கி, போலீஸ் ஸ்டேஷனில் முட்டிபோட வைப்பது, பப்ளிக் டாய்லெட்டில் தன் பையனோடு வந்திருப்பது தெரியாமல் போலீஸ் அவரை அடிக்கும் இடம், பள்ளிக்கூடத்தில் அசிங்கப்படும் இடம் எனப் பல இடங்களிலும் நெகிழ வைக்கிறார் சேதுபதி. திருநங்கைகளின் வாழ்வு நகர்தலை அச்சு அசலாய் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா.
விஜய் சேதுபதியின் மகனாக வரும் அந்தக் குட்டிப் பையன் அஸ்வந்த்துக்கு ஒரு பூங்கொத்து பார்சல். அபாரமான உடல்மொழி, அசத்தும் முகபாவங்கள்! சமந்தா, ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் ‘திக்’கென்ற பாத்திரங்களை ஏற்று, திருப்திகரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். கொலையை மறைக்க தன் கணவர் பஹத் ஃபாசிலுடன் சேர்ந்து படாதபாடுபட்டுக்கொண்டிருக்கும்போது, அங்கே வந்து நிற்கும் பக்கத்து வீட்டு பொடியன் கழுத்தில் கத்தி வைப்பது, பஹத் ஃபாசிலோடு கொலையை மறைக்க சுற்றுவது எனக் கடைசி வரை கலக்கி இருக்கிறார் சமந்தா. வெறுப்பும், சுயபச்சாதாபமும் பொங்க சூழ்நிலைக் கைதியாகத் துடித்து அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் பஹத் ஃபாசில். மகனின் மருத்துவ செலவுக்குத் துடிக்கும் இடத்திலும், கணவர் மிஷ்கினிடமும், மருத்துவமனையில் வீறிட்டபடி டாக்டர்களிடம் கெஞ்சும் இடத்திலும் தாய்மையின் வலியைத் துல்லியமாகக் கடத்துகிறார் ரம்யா கிருஷ்ணன்.
பதின் பருவ இளைஞர்கள் நான்கு பேருமே நன்றாக நடித்துள்ளனர். அதிலும் “எஜூகேசனுக்கு ஹெல்ப் பண்ற மாதிரியும், லைஃப்க்கு ஹெல்ப் பண்ற மாதிரியும் சி.டி கொடுங்க” எனக் கேட்கும் அந்த குண்டு பையன் தனித்துத் தெரிகிறார். விஜய் சேதுபதியின் மனைவியாக அழுகையின் ஊடே காட்சிகளைக் கடத்துகிறார் காயத்ரி. ஒரே ஒரு காட்சியில் வரும் கவுன்சிலர், வில்லன், ஆட்டோக்காரர் என அத்தனை பேரிடமும் மிகையில்லாத நடிப்பை வாங்கி இருக்கிறார்