உ.சந்தானலெட்சுமி
பிரசவிக்கப்போகும் சிசுவை தரிசிக்கக் காத்திருப்பது போல அந்த அரங்கமே ஆவலுடன் காத்திருந்தது. உலகமே கேட்கும் வகையில் அந்த அரங்கில் தமிழ்ச் சிறுவன் ஒருவனின் வெற்றி முழங்கப்பட்டது. நடுவர்கள் முதல் பார்வையாளர்கள் வரை அத்தனை கண்களும் கலங்கியிருக்க, அந்தச் சிறுவனின் முகத்தில் மட்டும் சாந்தப் புன்னகை. ஆம், விரல்களால் பேசும் தனது பியானோவால் சர்வதேசத்தையும் தன்னை நோக்கித் திரும்ப வைத்திருக்கிறான் லிடியன் நாதஸ்வரம்!
அமெரிக்காவில் நடைபெற்ற ‘தி வேர்ல்ட்ஸ் ஷோ’ என்ற ரியாலிட்டி ஷோவில் 6 சுற்றுகளை அனாயாசமாகக் கடந்து, இறுதிப்போட்டியில் இரு கைகளால் இரண்டு பியானோக்களை வாசித்து, வெற்றிக் கோப்பையை எட்டிப்பிடித்திருக்கிறான் சென்னையின் மைந்தனான லிடியன் நாதஸ்வரம். அவனது சாதனையை உலகமே கொண்டாடுகிறது. தமிழ் மண்ணுக்குப் புகழ் தந்த தவப்புதல்வனை வாழ்த்திவிட்டு வரலாமே என்று லிடியனின் சாலிகிராமம் வீட்டுக்குச் சென்றேன்.
பூங்கொத்துகளும் பொன்னாடைகளும் நிரம்பிக்கிடந்த அந்த வீட்டின் வரவேற்பறையே நமக்குச் சொல்லியது வந்து வாழ்த்தியவர்களின் வரிசையை! கிட்டத்தட்ட அந்த அறை முழுவதையும் ஆக்கிரமித்திருந்தது லிடியனின் பியானோ. நான் போனபோதும் தனது பிஞ்சு விரல்களால் விசைக்கட்டையில் இசை கோத்துக்கொண்டிருந்த அவன், கண்களால் என்னை வரவேற்றான். லிடியனின் வருடும் இசை அந்த அறையை மட்டுமல்ல... என்னையும் நிசப்திக்க வைத்தது. இசையில் லயித்திருந்த என்னைத் தட்டி எழுப்பினார் லிடியனின் தந்தை சதீஷ் வர்ஷன்.