உ.சந்தானலெட்சுமி
கும்பகோணம், மணக்கும் டிகிரி காபிக்கு மட்டுமல்ல... குறும்புக்கார பெண்களுக்கும் பேர்போன ஊர்தான் என்பதைத் தனது பேச்சிலும் செய்கையிலும் அப்பட்டமாய் சொல்கிறார் அபர்ணதி. அபர்ணதியா... இந்தப் பேரை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கேன்னு யோசிக்கிறீங்களா. அட, நம்ம ஆக்டர் ஆர்யாகூட பேச்சடி பட்டுச்சே அதே அபர்ணதிதாங்க!
தனியார் சேனலில் ஒளிப்பரப்பான ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சி மூலமாக நமது இல்லங்களுக்குள் வந்த அபர்ணதி, இப்போது கோடம்பாக்கத்தில் டென்ட் அடித்திருக்கிறார் . இந்தத் தகவல் கிடைத்ததுமே அபர்ணதியை போனில் பிடித்தேன். சேட்டை கலந்த சிரிப்புடன் பேசிய அந்தப் பெண்ணிடம் இன்னும் கொஞ்சம் பேசினால் என்னவென்று தோன்ற, ஒரு மஞ்சள் வெயில் நேரத்தில் நேரில் சந்தித்தேன்.
“அப்புறம், ஆர்யாவோட பண்ணின ஷோ எப்படி இருந்தது?” என்று நான் யதார்த்தமாகவே ஆரம்பித்தேன். “ஆர்யாவைப் பத்தி அப்புறம் பேசலாம், இப்ப நடிகை அபர்ணதி பத்தி பேசலாமே!” என்று என்னையே ரூட் மாற்றினார்.