சீரியல்ல அப்படி... நிஜத்துல இப்படி..! -   - மனம் நெகிழும் மாமியார் ‘மரகதம்’ பிந்து!

By காமதேனு

மஹா
readers@kamadenu.in

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் ‘ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி’ சீரியலின் நாயகி ராசாத்தி. இவரை பிறந்த வீட்டுக்கு அனுப்பியே தீருவேன் என ஒற்றைக்காலில் நிற்கும் மாமியார் மரகதத்தை ‘இப்படியும் ஒரு மாமியாரா?’ன்னு திட்டாதவர்கள் இருக்க மாட்டார்கள். ஊரே இப்படி கரிச்சுக் கொட்டுதே... என்னாகுமோ பாவம் என்று நினைத்தபடி, மரகதம் மாமியாராய் வரும் பிந்துவைச் சந்திக்கச் சென்றேன்.

ஷூட்டிங் இடைவெளியில் சீரியல் மருமகள்கள் ராசாத்தி, கண்மணி இருவரோடும் அமர்ந்து சதுரங்கம் ஆடிக்கொண்டிருந்தார் பிந்து.

‘‘இப்போ விளையாட்டு நேரம். இதுவே மதியம் லஞ்ச் பிரேக்ல வந்திருந்தீங்கன்னா… இவங்க ரெண்டு பேரும் எனக்கு மாறிமாறி சாப்பாடு ஊட்டிவிடுற அழகைப் பார்த்திருக்கலாம்!’’ என கலகலப்போடு பேட்டியைத் தொடங்கி வைக்கிறார்.

> ஊரே திட்டித் தீர்க்கும் வில்லி நீங்கள். சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் இப்படி மாறியிருக்கீங்களே?

யார்கிட்டேயும் அதிர்ந்து பேசினதில்ல. நிஜ வாழ்க்கையில, கோபம்னா எத்தனை கிலோன்னு கேட்கும் டைப் நான். இன்னைக்கு என் கதாபாத்திரத்தை ஊரே திட்டித் தீர்க்குறாங்க. எனக்கு அமைந்த ரோல் அப்படி. ஏன், எங்க வீட்லயே இன்னும் யாரும் நம்பல. என் மாமியாரே சீரியலைப் பார்த்துட்டு, ‘அம்மாடி வீட்ல இந்த மாதிரி மாறிடாதம்மா!’ன்னு பயப்படுறாங்க.

அப்படி ஒரு அடையாளத்தை இந்த சீரியல் கொடுத்திருக்கு. மலையாளத்தில் பதினைந்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டேன். நிறைய விளம்பரப் படங்களிலும் கவனம் செலுத்திட்டு வர்றேன். இப்போ ‘ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி’ சீரியலுக்கு கிடைக்கிற வரவேற்பைத் தனியாக குறிச்சுத்தான் வைக்கணும்.

> இந்த வாய்ப்பு எப்படி அமைந்தது?

கொச்சின்லதான் வசிக்கிறேன். என்னோட கணவரும் விளம்பரப் படங்களில் நடிக்கிறவர். எங்களுக்கு ஒரே பொண்ணு. மருத்துவ மாணவி; பாடகியும் கூட. நடிகர்களில் மம்முக்கா (மம்முட்டி) தொடங்கி இயக்குநர் சித்திக் படங்கள் வரைக்கும் மலையாளத்தில் ஒரு ரவுண்ட் வந்தாச்சு. நான் நடிச்ச ஒரு விளம்பரப் படத்தைப் பார்த்துட்டுதான் ‘ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி’ சீரியலில் நடிக்க அழைப்பு வந்தது. ‘தமிழ் பேச சிரமமா இருக்குமே?’னு சொன்னேன். ‘அதெல்லாம் பரவாயில்லை!’ன்னு கொண்டு வந்துட்டாங்க. இந்த அளவுக்கு ரீச் ஆக ஜீ தமிழ் சேனல் குழுவோட பக்கபலமும் முக்கியம்னு சொல்லணும். மலையாளத்துல, சொல்லிக்கிற மாதிரியா ஒரு ஃப்ரெண்ட்ஸ்கூட கிடைச்சதில்லை. ஆனா, தமிழ்ல இந்த சீரியலுக்குள் வந்தப்பறம் ராசாத்தி, கண்மணி, மங்கைன்னு நல்ல நல்ல ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சாச்சு. இதுக்கு நடுவுல, இப்போ விஜய் டிவியில ‘பொண்ணுக்கு தங்க மனசு’ன்னு ஒரு சீரியலுக்குள்ளேயும் வந்திருக்கேன். அதுலயும் என் கேரக்டர் ரீச் ஆகிட்டிருக்கு!’’
ரத்தினச் சுருக்கமாய் பேசிவிட்டு மறுபடியும் சதுரங்கத்தில் கவனம் திருப்புகிறார் அந்தக் கறார் மாமியார்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE