திரை விமர்சனம்: டுலெட்

By காமதேனு

காமதேனு விமர்சனக் குழு
readers@kamadenu.in

> ஒரு சினிமா உதவி இயக்குநர் (சந்தோஷ்), அவரது மனைவி (ஷீலா), மகன் (சித்தார்த்) ஆகியோரைக் கொண்ட எளிய குடும்பத்தை முன்வைத்து சென்னையில் வாடகைக்கு வீடு தேடி அலையும் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சோதனைகளையும் வேதனைகளையும் பதிவு செய்யும் படம்தான் ‘டு லெட்’.

> அதிக சம்பளம் பெறும் ஐடி இளைஞர்கள் வீடுகளுக்கு அதிக வாடகை கொடுக்கத் தயாராக இருப்பதால் வீடுகளின் வாடகை திடீரென்று உயர்கிறது. இதனால் மற்றவர்களுக்கு வீடு கிடைப்பது இன்னும் கடினமாகிறது. இதை ஐடி துறையைச் சேர்ந்த ஒருவரையும் காட்டாமல் அந்தத் துறையையோ அதில் பணியாற்றுபவர்களையோ எங்கும் குறை சொல்லாமல் சொல்லி இருப்பதில் இயக்குநர் செழியனின் முதிர்ச்சி தெரிகிறது.

> 2007-ல், நடக்கும் கதை இது. ஆனாலும் இந்தக் கதையில் பேசப்படும் பிரச்சினைகள் அனைத்தும் இன்றும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன என்பதால் இந்தப் படத்துக்கு சமகாலப் பொருத்தம் கிடைத்துவிடுகிறது.

> முன்னர் திரையில் பார்த்துப் பழகிய முகங்கள் எதுவும் படத்தில் இல்லை. பாடல்கள், நகைச்சுவை காட்சிகள், பிரமிப்பூட்டும் காட்சியமைப்புகள், பிரம்மாண்டமான செட்கள் - இவை எதுவும் இல்லை. பெரும்பாலான காட்சிகள் நான்கு சுவர்களுக்குள்ளேயே நகர்கின்றன. ஆனாலும், இளங்கோ (சந்தோஷ்), அமுதா (ஷீலா) , சித்து (தருண்) கதாபாத்திரங்கள் ரசிகர்களின் ஆழ்மனதில் வேரூன்றி விடுகின்றன.

> சாதி, மதம், உணவுப் பழக்கம், தொழில் ஆகிய காரணங்களால் வீடு மறுக்கப்படுவது, ஒருவரை நம்பிக்கையுடன் காக்க வைத்துவிட்டு அதிக வாடகை தரும் இன்னொருவருக்கு வீட்டைக் கொடுப்பது, வீடு தேடி வருபவர்களைக் கீழானவர்கள் போல் நடத்துவது என வீடு வாடகைக்கு விடப்படும் நடைமுறையில் இருக்கும் அவலங்கள் அனைத்தும் பதிவு செய்யப்படுகின்றன. ஆனாலும் எல்லா ஹவுஸ் ஓனர்களும் பணத்திலேயே குறியாக இருப்பது போன்ற காட்சியமைப்புகள் எதிர்மறையான போக்கையே நமக்குள்ளும் விதைக்கிறது. ஓரிரு நல்ல ஹவுஸ் ஓனர்களையும் காட்டியிருக்கலாம்.

> புகழ்பெற்ற ஒளிப்பதிவாளரான செழியன் இயக்குநராகியிருக்கும் இந்தப் படத்தில் கூடுமானவரை காட்சி மொழியைப் பயன்படுத்தியிருக்கிறார். பல காட்சிகளில் கதாபாத்திரங்களின் முகம் காண்பிக்கப்படாமல் தொலைபேசி உரையாடல், கணவன் – மனைவிக்கு இடையான உரையாடல்கள் மூலம் சொல்ல வந்ததைத் தெளிவாக உணர்த்தியுள்ளார்.

> யதார்த்தங்களுக்கு அப்பால் ஒரு காட்சிகூட இல்லாமல், நம்பகத்தன்மையோடு நகர்வது படத்தின் மிகப்பெரிய பலம். செழியனின் ஒளிப்பதிவில் சென்னையின் வெளிப்புறப் பகுதிகளும் அபார்ட்மென்டுகளும் தீப்பெட்டியை அடுக்கிவைத்தது போன்ற குடியிருப்புகளும் கச்சிதமாகப் பதிவாகியுள்ளன. பின்னணி இசையே இல்லாமல் இயற்கையான ஒலிகளை மட்டும் பயன்படுத்தியிருப்பது படத்தின் இயல்புத்தன்மைக்கு உதவுகிறது.

> சொந்த வீடு என்பது பலருக்கும் கனவு என்ற பொதுவெளிப் புரிதலின் அடி ஆழத்துக்குச் சென்று வாடகை வீடுகளில் வசிப்போரின் உளவியல் சிக்கலைப் பேசிய விதத்திலும், ஹவுஸ் ஓனர்கள் சமூகத்தை நோக்கி கேள்வி கேட்கும் தொனியிலும் அழுத்தமாகத் தடம் பதிக்கிறது இந்த டு லெட்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE