திரை விமர்சனம்: கண்ணே கலைமானே

By காமதேனு

காமதேனு விமர்சனக் குழு
readers@kamadenu.in

> இயற்கை விவசாயத்தில் ஆர்வமுள்ள கமலக்கண்ணன் ( உதயநிதி) மண்புழு உரம் தயாரிக்கிறார். மதுரை கிராம வங்கியில் மேலாளராகப் பணிபுரிகிறார் பாரதி (தமன்னா). இவர்களுக்கிடையே மோதல் தொடங்கி பிறகு காதலாக மாறுகிறது. காதலுக்கு மறுக்கும் தனது குடும்பத்தினரிடம் பிடிவாதம் பிடித்து சம்மதம் வாங்கி தமன்னாவை மணக்கிறார் உதயநிதி.

ஆனால், ஒரு தீராத பிரச்சினை நோயாக வந்து தமன்னாவை வாட்டுகிறது. இந்நிலையில் தமன்னாவின் நிலை என்ன, அவரை உதயநிதியின் குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டார்களா, தமன்னாவுக்கு  என்ன நோய் போன்ற கேள்விகளுக்கு திரைக்கதையில் பதில்கள் விரிகின்றன.

> ‘மனிதன்' படத்திற்குப் பிறகு உதயநிதிக்கு இது முக்கியமான படம். இயற்கை விவசாயம் மீதான ஆர்வத்தையும், தமன்னா மீதான காதலையும் மிக நேர்த்தியான நடிப்பின் மூலம் வெளிப்படுத்துகிறார்.

> தமன்னாவின் பார்வையில்தான் படம் பயணிக்கிறது. தமன்னாவும் நடிப்பின் வழியே அதற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். சின்னச் சின்ன அசைவுகளில், எதிர்பார்ப்பில், தவிப்பில் தேர்ந்த நடிகை என்பதை நிரூபிக்கிறார்.

> குடும்பம் உடைந்துவிடக் கூடாதென்று பார்த்துப் பார்த்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் காட்டும் ‘பூ' ராமு, ஈகோவால் எகத்தாளமாகப் பார்த்து பின் பிரச்சினையின் வேர் புரிந்து பாசம் காட்டும் வடிவுக்கரசி ஆகிய இருவரும் மிகச்சிறந்த  உறுதுணை  கதாபாத்திரங்கள். இருவரும் அநாயசமான நடிப்பில் மனதில் நிறைகிறார்கள். நண்பனுக்காக ஓங்கிக் குரல் கொடுக்கும் வசுந்தராவும், வங்கியின் மேலாளராக உயரும் ஷாஜியும் தத்தம் கதாபாத்திரங்களில் பொருந்திப் போகிறார்கள்.

> மதுரை மண்ணையும் வயல்களின் செழிப்பையும் மனித மனங்களில் சுமக்கும் அன்பையும் ஜலந்தர் வாசன் தன் கேமராவில் அழகாகப் படம் பிடித்துள்ளார். ‘எந்தன் கண்களை’ பாடல் நெஞ்சைப் பிழியும் சோகத்தைக் கொட்டுகிறது. பின்னணி இசையில் கதையோட்டத்துக்குத் தேவையான ஒத்திசைவைக் கொடுத்திருக்கிறார் யுவன். காசி விஸ்வநாதன் முதல் பாதியில் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம்.

> ``எங்கே நேர்மை இருக்கோ அங்கே மூர்க்கம், கோபம் ரெண்டுமே இருக்கும்'', ``ஒரு சேலை நெய்ய ஒரு நெசவாளி 20 ஆயிரம் முறை கையைக் காலை ஆட்டணும்”, “இந்தப் பேச்சுல நம்ம பேச்சை மறந்துடாதீங்க'' போன்ற எளிமையான வசனங்கள் படத்தின் பலம்.

> விவசாயக் கடன், விவசாயி தற்கொலை, நீட் தேர்வு, இயற்கை விவசாயம், கல்விக் கடன் என்று முதல் பாதி முழுக்க கருத்துகளால் நிறைத்திருக்கிறார் சீனு ராமசாமி. டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தையும், நீட் தேர்வின் பாதகம் என உதயநிதி எதற்கெடுத்தாலும் கருத்தூசி போடுகிறார். அதை மட்டும் குறைத்திருக்கலாம்.

> மற்றபடி, மனித வாழ்வின் அனுபவங்களை, அன்பை ஒரே நேர்கோட்டில் பதிவு செய்திருக்கும் திரைக்கதை உத்தி மனசுக்கு நெருக்கமாக அமைந்துவிடுகிறது. கெட்டதை நினைக்காத, கெட்டதைச் செய்யாத மனிதர்கள் சூழ் உலகை  அருகிருந்து பார்ப்பது போன்ற உணர்வையும், தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டாலும் அன்பு அத்தனை குறைகளையும் மறக்கடிக்கும் என்பதையும் அழுத்தமாகச் சொன்ன விதத்தில் சீனு ராமசாமி வெற்றி பெற்றிருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE