தில்லுக்குத் துட்டு 2- திரை விமர்சனம்

By காமதேனு

அழகான நாயகி மாயா (ஷிர்தா சிவதாஸ்). அவரிடம் காதலைச் சொல்லும் ஆண்கள் எல்லாம் அடுத்த கணமே பேயடி வாங்குகிறார்கள். அப்படியொரு பேய்ப்பாதுகாப்பு அவருக்கு. ஏரியாவில் குடித்துவிட்டு ஓவராக அழிச்சாட்டியம் செய்யும் நாயகன் விஜியை (சந்தானம்) அவளுடன் கோத்துவிடுகிறார்கள், ஏரியாவாசிகள். பேயடியில் இருந்து நாயகன் தப்பினாரா...காதல் கை கூடியதா என்பதே ‘தில்லுக்குத் துட்டு 2’.

‘லொள்ளு சபா’ புகழ் இயக்குநர் ராம் பாலா, சந்தானத்தை மறுபடியும் காப்பாற்றியிருக்கிறார். ஹீரோயிஸத்தை விட காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்தால் படம் வெற்றி என்ற ஃபார்முலாவைக் கச்சிதமாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

நாயகன் சந்தானம், இளம் நாயகர்களுக்குச் சவால் விடும் அளவுக்கு அழகாக, ஸ்டைலாக இருக்கிறார். சண்டை, நடனக்காட்சியிலும் ஓகேதான். அதைவிட காமெடியிலும் ஜமாய்த்து தன் இருப்பைத் தக்கவைத்துக் கொள்கிறார்.

சரக்கடித்துவிட்டு வம்பு பண்ணுகிறேன் பேர்வழி என்று சந்தானம் செய்யும் அலப்பறைகள் அலுப்பின் உச்சம். படத்தின் கதைக்கு சம்பந்தமே இல்லாத பகுதிகள் நீட்டி முழக்கப்பட்டு பொறுமையைச் சோதிக்கின்றன. டைமிங் ஜோக்கில் சந்தானத்தைக் கேட்கவா வேண்டும்? அதுவும் மந்திரவாதி மாமனாரை, சோட்டானிக்கரை முக்கன்னி மயானத்துக்கே போய் கலாய்க்கிற காட்சியில் வயிறு புண்ணாகிவிடுகிறது. ஆனாலும், காமெடி என்ற பெயரில் மதுவையும், இரட்டை அர்த்த வசனங்களையும் இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் சந்தானம் நம்பி இருக்கப் போகிறாரோ?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE