கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘பேட்ட’ட்ரைலர் பேசவைத்திருக்கிறது. “அடிச்சு அண்டர்வேரோட ஓடவிட்ருவேன் பாத்துக்கோ... சிறப்பான தரமான சம்பவங்கள இனிமேல்தான் பார்க்க போற” என்று ரஜினியின் வசனங்கள் மாஸான ஹிட்டடித்திருக்கிறது! செம ஸ்டைலும், துள்ளலுமாக ரஜினியைக் காட்டியிருக்கிறார் ரஜினி ரசிகரும் இயக்குநருமான கார்த்திக் சுப்பாராஜ். அரசியல் தலைவரின் மகனான பாபி சிம்ஹா படிக்கும் கல்லூரியின் ஹாஸ்டல் வார்டனாக வருகிறார் ரஜினி. ‘அனுமான் சேனா’ என்று எழுதப்பட்டுள்ள கட்டிடம் எரியும் காட்சியும், ரஜினி பேசுகிற வசனங்களும் நிச்சயம் இது அரசியல் பேசும் ‘பேட்ட’தான் என்று ரசிகர்களைக் கொண்டாட வைத்திருக்கிறது.
‘ஓப்பனிங் எல்லாம் நல்லாத்தான் இருந்துச்சு’ன்னு மறுபடியும் சொல்ல வெச்சிடாதீங்கப்பா..!
ஒரே நேரத்தில் அண்ணன் சூர்யா மற்றும் தம்பி கார்த்தியுடன் நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங், நடிப்பைத் தவிர பிசினஸிலும் பக்கா கில்லாடி. ஹைதராபாத்தில் ஜிம் ஒன்றை வெற்றிகரமாக நடத்தி வரும் அவர், கிரிக்கெட் பிதாமகன் தெண்டுல்கரைப் போல, உலகின் தலை சிறந்த உணவுகள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் ஹோட்டல் ஒன்றைத் தொடங்கும் திட்டத்தில் இருக்கிறார்.
தொழிலதிபரை மணக்கிற நடிகைகள் மத்தியில்... ஸ்ட்ரெய்ட்டாக தொழில் அதிபரா?! வாவ்...
‘பிங்க்’ ரீ-மேக்கில் அஜித் நடிக்கப் போகிறார் என்பது தெரிந்த விஷயம். அந்தப் படத்தை இயக்கப் போகும் ‘சதுரங்க வேட்டை’ எச்.வினோத் பெயரை தனது படத்துக்கு டிக் அடித்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி. இயக்குநர் வினோத் சொன்ன கதை ரஜினிக்குப் பிடித்துப் போய் விட்டதாம். ஏ.ஆர்.முருகதாஸ் படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கப் போகும் இந்தப் படத்தில் தனுஷும் இருக்கலாம் என்பது கூடுதல் தகவல்.
அப்ப, பாராளுமன்றத் தேர்தல்ல போட்டின்னு தலைவர் சொன்னது 2024 ஆ?!
உதயநிதி நடிக்கும், ‘சைக்கோ’ படத்தை இயக்கிவருகிறார் மிஷ்கின். தன்னை நடிக்க வைப்பதாக கூறி, ஒரு கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு மிஷ்கின் ஏமாற்றுகிறார் என்று மைத்ரேயா என்ற இளைஞர் வழக்குத் தொடுத்திருக்கிறார். க்ரைம், த்ரில்லர் படங்களை மிஷ்கின் இயக்கக்கூடாது என்று ஐகோர்ட்டும் உத்தரவிட்டுள்ளது. மிஷ்கின் வாங்கிய ஒரு கோடியை திருப்பிக் கொடுத்தால் மட்டுமே ‘சைக்கோ’ படத்தின் பிரச்சினை தீரும். ஆனால், ‘துப்பறிவாளன்’ விஷால் இருக்கும் தைரியத்தில், எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்கிறாராம் மிஷ்கின்.
ம்க்கும்... அவருக்கே ஆயிரத்தெட்டு பிரச்சினை..!