கா.இசக்கி முத்து
‘கண்ணாளனே' பாடலைப் பார்த்த பலருமே, ‘யாருப்பா ஒளிப்பதிவு' என்று ஆச்சரியப்பட்டார்கள். அந்த அளவுக்கு பிரமாதப்படுத்தியிருப்பார் ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன். தனது ஒளிப்பதிவின் மூலம் பல வித்தைகளைச் செய்துகாட்டியவர், ‘மின்சார கனவு', ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படங்கள் மூலமாக இயக்குநராகவும் தன்னை அடையாளப்படுத்தினார். 19 ஆண்டுகள் கழித்து ‘சர்வம் தாளமயம்’ படத்தை இயக்கித் தயாரித்துள்ளார். திரைப்பட விழாக்களில் வரவேற்பு, முன்னணி இயக்குநர்களின் பாராட்டு என மகிழ்வின் உச்சத்தில் இருந்தவரிடம் ‘காமதேனு' இதழுக்காகப் பேசினேன்.
இசையை மையமாக வைத்து படம் இயக்கியுள்ளீர்கள். இசை மீது அவ்வளவு நாட்டமா?
என் அப்பா கப்பற்படையில் இருந்ததால், சின்ன வயதில் அடிக்கடி ஊர் மாறுவோம். அந்த ஊர்களில் இசை அரங்கமெல்லாம் இருக்காது. மாலையில் விளையாடிவிட்டு வீட்டுக்கு வந்தால், அம்மா இசைப்பயிற்சியில் இருப்பாங்க. அவங்க பாடி முடிச்ச பின்னால, ‘இது என்ன ராகம்'னு கேட்டுத் தெரிஞ்சுப்பேன். அப்படித் தொடங்கிய இசை ஞானம், சென்னைக்கு வந்த பிறகு இன்னும் பல விஷயங்களைப் புரியவைத்தது. அதனால் எனக்குள் இயல்பாகவே இசை ஆர்வம் அதிகமானது. “மனதுக்குள் எத்தனை துன்பமிருந்தாலும் இசையைக் கேட்டால் நல்ல ஒரு ஃபீல் கிடைக்கும். கவலை வரும்போது, ஸ்ருதி பாக்ஸ் போட்டுட்டு சும்மா பாடு சரியாகிவிடும்” என்று அம்மா அடிக்கடி சொல்வார். அதுதான் என்னை இங்கே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.