ஒரு குற்றவாளியை என்கவுன்ட்டர் செய்வதற்காக வரும் போலீஸ் அதிகாரி, அதே நபரைக் காப்பாற்றத் துடித்தால் அதுவே ‘துப்பாக்கி முனை'.
விக்ரம் பிரபு இதற்கு முன்பு போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இந்தப் படத்தில் என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் கதாபாத்திரத்துக்குப் பக்காவாகப் பொருந்துகிறார். அம்மாவின் அன்புக்காக ஏங்குவதும், தான் செய்வது தவறில்லை. இதுவும் ஒரு அறம்தான் என்பதைப் புரிய வைப்பதுமாக படம் நெடுகிலும் தனது பக்குவமான நடிப்பை வழங்கியுள்ளார்.
கதாநாயகிக்கு உரிய அம்சங்களில் ஹன்சிகாவின் கதாபாத்திரம் கட்டமைக்கப்படவில்லை. முக்கியத் திருப்பங்களுக்கு அவர் பயன்பட்டாலும் குணச்சித்திரக் கதாபாத்திரமாகவே அமைந்துவிடுகிறது.
நானும் இந்தப் படத்தில் இருக்கிறேன் என அட்டென்டன்ஸ் போட்டிருக்கிறார் ‘ஆடுகளம்' நரேன். வேல ராமாமூர்த்தி வில்லனுக்கான தனது பங்களிப்பைச் சிறப்பாகவே செய்திருக்கிறார். ஆனால், “நீ பண்ண தப்புக்கு மரணம்தான் தண்டனை” என்று தாதா ரேஞ்சுக்கு பேசுபவர், அவசரப்பட்டு விபரீத முடிவை எடுப்பது நம்பும்படியாக இல்லை. ஆசாத் கதாபாத்திரத்தில் வரும் ‘மிர்ச்சி' ஷா தனது அப்பாவியான நடிப்பால் மனதை அள்ளுகிறார்.