இர.அகிலன்
முடியைச் சிலுப்பி, ஸ்லீவைச் சுருட்டி, காலரைப் புரட்டி வருகிற ‘பேட்ட’ ரஜினியின் ஓப்பனிங் பாடலை பொங்கலுக்குக் கொண்டாட இப்போதே தயாராகி வருகிறார்கள் ரசிகர்கள். பிரம்மாண்டத்தை விட தரை லோக்கலில் தங்கள் தலைவர் கலக்குவதைத்தான் ரஜினி ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்கிற மந்திரத்தை நன்றாக அறிந்து வைத்திருக்கிறார் கார்த்திக் சுப்பாராஜ்.
ரஜினியின் ஒவ்வொரு பட ரிலீஸின் போதும் குழந்தைகளில் ஆரம்பித்து பெரியவர்கள் வரைக்கும் கொண்டாட்ட மனநிலையில் வைத்திருப்பது அந்த மாஸ்தான். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘பேட்ட’ படத்தில் ரஜினிக்கு அது அமைந்திருக்கிறது. மாஸான அறிமுகம், ரசிகர்களையும் ஆட்டம் போட வைக்கும் ஓப்பனிங் சாங், யூத் ஃபுல்லான துள்ளலிசை, ஆங்காங்கே பன்ச் வசனங்கள், அதிர வைக்கிற ஆக்ஷன், கொஞ்சம் சென்டிமென்ட், நட்பு, துரோகம், பழி வாங்கல் என அனைத்தையும் சேர்த்து இறுதியில் சந்தோஷமான ஒரு முடிவு என்பதுதான் ரஜினி படங்களுக்கான ஸ்டாண்டர்டு ஃபார்முலா. இந்த ஃபார்முலா தரும் மேஜிக்கை சரியாக திரையில் கொண்டு வந்தால் போதும், படம் ஹிட் லிஸ்டில் சேர்ந்துவிடும்.
“ரஜினியின் மாஸ் படங்களை இயக்கிய அத்தனை பேருமே ஒருவகையில் ரஜினி ரசிகர்களாகத்தான் இருப்பார்கள். கார்த்திக் சுப்பாராஜை அழைத்து ரஜினி கதை கேட்டதே அவர் இயக்கிய ஜிகர்தண்டா படத்தில் வரும் அசால்ட்டு சேது கதாபாத்திரத்தைப் பார்த்துதான். பாபி சிம்ஹா அதகளம் செய்திருந்த அந்தக் கதாபாத்திரம் ரஜினிக்கு மிகவும் பிடித்துப்போனது. அந்தப் படத்துக்காக கார்த்திக் சுப்பாராஜை அழைத்துப் பாராட்டியபோதே, தனக்காக ஒரு கதை தயார் செய்யுமாறு கூறி இருந்தார் ரஜினி. கபாலி, காலா படங்களுக்குப் பிறகு தனது ரசிகர்கள் தன்னிடம் எதிர்பார்ப்பதைக் கொடுக்க முடியவில்லையோ என்ற வருத்தம் ரஜினிக்கு ஏற்பட்டது. அந்த வருத்தத்தைப் போக்கவே அடுத்த படத்துக்கு கார்த்திக் சுப்பாராஜைத் தேர்வு செய்தார் ரஜினி” என்கிறார்கள் திரைத்துறை வட்டாரத்தில்.