மொத்தமே 4 படம், அதில் மூன்று விஜய்யுடன் என்ற பெருமைக்குச் சொந்தக்காரராகியிருக்கிறார் அட்லி. இப்போதைக்கு ‘விஜய் 63’ என்றழைக்கப்படும் இப்படத்துக்காக சிறப்புப் பயிற்சியாளரின் உதவியுடன் தன் உடற்கட்டை மேலும் மெருகேற்றுகிறார் விஜய். விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் கதையாம்.
எந்தக் கதையாக இருந்தாலும், ‘சுட்டதா’ன்னு கேட்பாங்களே?!
‘பேட்ட’ படத்தில் சிம்ரன், த்ரிஷா, மேகா ஆகாஷ் என்று நிறைய நடிகைகள் இருந்தாலும், இளசுகளைப் பரபரப்பாக்கும் ஒரே பெயர் மாளவிகா மோகனன். பழம்பெரும் ஒளிப்பதிவாளர் மோகனனின் மகள். மலையாளம், கன்னடம், இந்தி என ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்த மாளவிகா, இந்தப் படத்தின் மூலம் தமிழ்நாட்டு ‘பேட்ட’க்குள் நுழைகிறார்.
கேரளத்துப் பொண்ணு... கைவிடாது தமிழ்நாட்டு மண்ணு!
பாரதிராஜாவில் தொடங்கி லிங்குசாமி வரையில் இதுவரை 6 பேர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படம் எடுப்பதாக அறிவித்தார்கள். அவர்களை முந்திக்கொண்டு அறிமுக இயக்குநர் பிரியதர்ஷினி, ‘தி அயர்ன் லேடி’ படத்தின் போஸ்டரை வெளியிட்டுவிட்டார். ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை நித்யாமேனனும், சசிகலாவாக வரலட்சுமியும் நடிக்கவிருப்பதாகவும் அறிவித்திருக்கிறார். கடைசியாக கிடைத்த தகவல்படி இந்தப் போட்டியில் இருந்து லிங்குசாமி விலகிவிட்டதாக தகவல்!
நினைவு நாளையே நாலு கோஷ்டியா கொண்டாடுறாங்க. 4 படந்தான் வரட்டுமே?!
அரசியலில் தடம் பதிப்பதால், ‘இந்தியன்-2’க்கு பிறகு நடிக்கப் போவதில்லை என்று அறிவித்துவிட்டார் உலகநாயகன். ‘இந்தியன்-2’க்கு பிறகு 3டி தொழில்நுட்பத்தில் இன்னொரு படத்தை எடுப்பதற்கான வேலை களில் சத்தமில்லாமல் இறங்கியிருக்கிறார் இயக்குநர் ஷங்கர். ‘2.0’ படத்தில் மிஸ் ஆன அர்னால்ட் இந்த படத்தில் இருப்பது உறுதியாம். ஜாக்கிசானுடனும் பேச்சு வார்த்தை நடக்கிறதாம்.