பக்‌ஷிராஜனாக கமல் நடித்திருந்தால்...  ஒரு 2.Oகற்பனை!

By காமதேனு

எம்.சோபியா
readers@kamadenu.in


“ரஜினி சார் சொன்னதால் 2.0 -வில் கமல் சாரையும் நடிக்கவைக்க முயன்றேன்; முடியவில்லை” - இது இயக்குநர் சங்கரே சொன்னது. அப்படி ஒருவேளை, 2.0-வில் பக் ஷிராஜனாக அக் ஷய் குமாருக்குப் பதில், கமல் நடித்திருந்தால் என்னவெல்லாம் நடந்திருக்கும்? ஒரு கற்பனை.

கதை விவாதத்தின்போதே, “பக் ஷிராஜன் கேரக்டரோட அந்த விஞ்ஞானி வசீகரன் கேரக்டரையும், சிட்டி கேரக்டரையும் நானே பண்றேன். குட்டி (3.0) கேரக்டரை ‘அபூர்வ சகோதரர்’ (அப்பு) படத்துலேயே நான் பண்ணிட்டதால, பாவம் ரஜினியே அதைப் பண்ணட்டும்” என்று ஷங்கரிடம் ‘பெருந்தன்மை’யாகச் சொல்லியிருப்பார் கமல்ஹாசன்.

“ஒரு சிட்டுக்குருவியின் இறக்கை படபடப்பில் துவங்கும் அதிர்வுக்கும் ஒரு இயந்திரப் பறவையின் அழிவுக்கும் கூட தொடர்புண்டு என்கிறது ‘கயாஸ் தியரி’ எனும் மேற்கத்திய தத்துவம். அதுதான் இந்தப் படத்தின் ‘மய்யம்’. கதை சொல்லும் நானே கதையின் நாயகனும் ஆனேன்” என்று படத்துவக்கத்திலேயே வாய்ஸ் ஓவரில் பேசி, ‘ரஜினி வெறுமனே கவுரவத் தோற்றம்தான்’ என்று சொல்லாமல் சொல்லியிருப்பார் கமல்.

பக் ஷிராஜனுக்கு பூஜாகுமாரும், வசீகரனுக்கு ஆண்ட்ரியாவும் (ரோபோட்) உதவியாளராகியிருப்பார்கள். “நான் செல்போனில் எல்லாம் முத்தம் கொடுத்தா ரசிகர்கள் ஏத்துக்க மாட்டாங்க” என்று அடம்பிடித்து, அந்த ‘லிப்லாக்’குக்காகவே ஐஸ்வர்யா ராயையும் 2.0-வில் நடிக்க வைத்திருப்பார்.“இமயமலையில முத்தப்பறவைன்னு ஒரு பறவை இருந்தது” என்று சொல்லியபடியே அது என்ன செய்யும் என்பதை பூஜாவின் உதட்டில் செய்முறை விளக்கம் செய்திருப்பார் பக் ஷிராஜன். வானத்துலேயே பறந்து பறந்து கிஸ்ஸடிப்பது மாதிரி ஒரு பாட்டும் கேட்டிருப்பார். செல்போன் டவரில் தூக்கில் தொங்குவதற்குப் பதிலாக, “காதல் பறவைகள் ஒன்றாகத்தான் சாகும்” என்று சொல்லி, பூஜாகுமாரையும் மலையில் இருந்து தள்ளி சாகடித்திருப்பார்.

“செல்போன் வெச்சிருக்கிற ஒவ்வொருத்தரும் கொலைகாரன்தான்” என்ற சின்ன டயலாக்கை, பெயர் வாங்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக 8 கிலோ மீட்டருக்குப் பேசியிருப்பார் கமல். அப்படியும் அது ஒரு பயலுக்கும் புரிந்திருக்காது!

ட்ரெய்லர்லேயே ஏதாவது மதத்தையோ, சாதியையோ திட்டி பிரச்சினையை உண்டு பண்ணியிருப்பார். “ படத்தை எங்களுக்குப் போட்டுக்காட்டிட்டு ரிலீஸ் பண்ணு” என்று ஏதாவது ஒரு மத அமைப்பு அட்டையைத் தூக்கிக்கொண்டு போராடியிருக்கும். “இயக்குநர் ஷங்கர்தான், ஆனால் இயக்கியது கமல். வசனம் ஜெமோதான். ஆனால், எழுதியது கமல். இசை ரஹ்மான்தான். ஆனால், இசையமைத்தது கமல்” என்றெல்லாம் சொல்லுமளவுக்கு ‘தசாவதாரம்’ எடுத்திருப்பார் உலக நாயகன்.

“ஒரு பறவை லண்டன்ல இருந்து வேடந்தாங்கலுக்கு வருது”ன்னு ஒரு டயலாக் இருந்தா போதும், “வாங்க நாம லண்டனுக்குப் போய் ஒரு ஷாட் எடுத்திடலாம்” என்று சொல்லியிருப்பார் திரையுலக மோடியான கமல்! 

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE