‘காற்றின் மொழி' - திரை விமர்சனம்

By காமதேனு

ஒரு குடும்பத்தலைவி ஆர்.ஜே (ரேடியோ ஜாக்கி) வேலைக்குச் செல்ல, அதனால் குடும்பத்துக்குள் பிரச்சினைகள் முளைத்தால் அதுவே ‘காற்றின் மொழி'.

விதார்த் - ஜோதிகா இவர்களின் ஒரே மகன் சித்து. ஹலோ எஃப்.எம். நடத்தும் போட்டியில் வெற்றி பெற்று, அதற்கான பரிசைப் பெற அந்த அலுவலகம் செல்கிறார்கள். அப்போது ஜோதிகாவுக்கும் ஆர்.ஜே. ஆகும் ஆசை துளிர்க்கிறது. ஆர்வமுடன் ஆடிஷனில் கலந்துகொண்டு தேர்வாகி ஆர்.ஜே.வும் ஆகிறார். ஆனால், அந்த நேரத்தில் குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகமாகின்றன. மகன் சித்து வீடியோ கேம்களுக்கு அடிமையாகிறான். பணியில் விதார்த்துக்கும் மனரீதியாக அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் ஜோதிகாவின் வேலை என்ன ஆகிறது, விதார்த் தன் வேலையை தக்கவைத்துக் கொண்டாரா, சித்து என்ன ஆகிறார் போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

ஒரு இந்திப் படத்தின் மறு ஆக்கம் என்ற போதிலும், நுண் உணர்வுகளை மெல்லிய இழையுடன் சொல்லும் இயக்குநர் ராதாமோகனின் பாணி இந்தப் படத்திலும் தொடர்வது ஆரோக்கியமானது. ஆனால், இரட்டை அர்த்த வசனங்களில் நெளிய வைக்கிறார். இயக்குநர் இதைத் தவிர்த்திருக்கலாம்.

சரோஜாதேவியை இமிடேட் செய்து பேசுவது, மிமிக்ரி என்ற பெயரில் மிகை உணர்ச்சி காட்டுவது போன்ற சங்கடங்களை ஜோதிகா தவிர்த்திருக்கலாம். ஆர்.ஜே. ஆன பிறகு முகம் தெரியாத முகங்களுக்கு ஆறுதல் சொல்லும் விதத்தில் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார். லட்சுமி மஞ்சு, இளங்கோ குமாரவேல் கேட்கும் கேள்விகளுக்கு ரியாக்‌ஷனில் பதில் சொல்லும் விதம் சிறப்பு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE