தம்பி
நண்பர் ஒருவரின் மகன் ஸ்பைடர்மேனின் தீவிர ரசிகன். வயது நான்குதான். அவனிடம் “நீ என்ன படிக்கப் போகிறாய்?” என்று கேட்டால், “நான் ஸ்பைடர்மேனுக்குப் படிச்சுப் பெரிய ஸ்பைடர்மேனா ஆகப்போறேன்” என்பான். அது மட்டுமா, கீழிருந்து மேலே தாவுவது, ஜன்னலிலிருந்து குதித்து ஸ்பைடர்மேன் மாதிரியே தரையில் போஸ் கொடுப்பது என்று சாகசங்களை நிகழ்த்த ஆரம்பித்திருக்கிறான். சில சமயம் கீழே விழுந்து அடிபட்டதும் உண்டு. அதனால் என் நண்பர் தன் மகனிடம் ஸ்பைடர்மேன் நிஜம் இல்லை, கிராஃபிக்ஸ் என்று சொல்லியிருக்கிறார். அவன் நம்பவில்லை. பிறகு, ஸ்பைடர்மேன் திரைப்பட உருவாக்கம் பற்றிய இணைய வீடியோக்களைப் போட்டுக்காட்டுகிறார். பிறகு, நண்பர் வேறு விஷயத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். விசும்பல் சத்தம் கேட்டதும் கூடத்துக்கு வந்து பார்த்திருக்கிறார். தரையில் குப்புறப் படுத்துக்கொண்டு அவரது மகன் அழுதுகொண்டிருந்திருக்கிறான். “என்ன செல்லம், யாரு உன்னை அடிச்சாங்க? ஏன் அழற?” என்று கேட்டிருக்கிறார். “போ, நீதான் ஸ்பைடர்மேன் உண்மை இல்லை, கிராஃபிக்ஸ்னு சொல்லிட்டேல்ல” என்றபடி அழுகையைத் தொடர்ந்திருக்கிறான்.
அந்தக் குழந்தை என்று இல்லை, பெரும்பாலான குழந்தைகளின் மனதில் ஸ்பைடர்மேன் ஆழமாகத் தாவிக்குதித்து அமர்ந்திருக்கிறான். அப்படிப்பட்ட மரணமில்லாத ஸ்பைடர்மேனைப் படைத்த கலைஞர் ஸ்டான் லீ தனது 95-வது வயதில் நவம்பர் 12 அன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காலமானார்.
ஸ்டான் லீயின் இயற்பெயர் மார்ட்டின் லீபெர். 1922-ல் மன்ஹாட்டனில் ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர்.சிறுவயதிலேயே இலக்கிய, வெகுஜனப் படைப்புகளையெல்லாம் கரைத்துக் குடித்த ஸ்டான் லீக்கு 17 வயதிலேயே டைம்லி காமிக்ஸ் என்ற பதிப்பகத்தில் வேலை கிடைத்தது. அந்தப் பதிப்பகத்தின் பதிப்பாசிரியர் அங்கிருந்து விலகிச் செல்லவே 19 வயதிலேயே அந்தப் பதிப்பகத்தின் பதிப்பாசிரியராக ஆகிறார் லீ.