நா.இரமேஷ்குமார்
இயக்குநராக ‘ஆரோகணம்’ படத்தில் ஆரம்பித்த பயணம். ‘நெருங்கி வா முத்தமிடாதே’, ‘அம்மணி’ என அவ்வப்போது இந்தச் சமூகத்தின் குறுக்கு நெடுக்குத் தோற்றத்தை திரைமொழியில் கொண்டுவருகிற இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன், அடுத்ததாக, ‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் மூலமாக வித்தியாசமான காதலைப் பேச வருகிறார். எல்லோரும் தங்களை வாழ வைக்கும் சென்னையைத் தனியே விட்டுவிட்டு, சொந்த ஊருக்குக் கிளம்பிய தீபாவளிக்கு முந்தைய நாளில் லட்சுமி ராமகிருஷ்ணனை காமதேனு இதழுக்காகச் சந்தித்துப் பேசினேன்.
பார்க்காமலே காதல், சொல்லாமலே காதல், பேசாத காதல், 96 காதல்னு நிறைய காதல் படங்கள் வந்திருச்சே. நீங்க புதுசா என்ன சொல்லப் போறீங்க?
புதுசா சொல்லலை. ஆனா, பழைய காதலைச் சொல்றேன். நான் பார்த்த, எனக்குத் தெரிந்த காதலைப் பற்றிச் சொல்லியிருக்கேன். ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியில், ஒரு பெண், “புகைப்படங் களை எடுத்து வைத்துக்கொண்டு, என் காதலன் என்னை மிரட்டுறான்”னு வந்துச்சு. 18, 19 வயசு தான் இருக்கும். எத்தனை மாசமா அவனைத் தெரி யும்னு? கேட்டா, ”மூணு மாசமா”ன்னு பதில் சொல்லுது. மூணு மாசத்துல ஒருத்தனைப் பார்த்து, காதலிச்சு, புகைப்படங்களை வெச்சு அவன் மிரட்டுற அளவுக்குப் போய் நிறுத்தியிருக்கு. சரி... அவனை எப்படித் தெரியும்னு கேட்டா, “என்னோட பாய் ஃப்ரெண்டோட ஃப்ரெண்டு”ன்னு சொல்லுது. உண்மையான காதல் இருக்கிற சமூகத்தில் தான் இப்படியான காதல்களும் மிரட்டுது.