அழகு திரும்பலாம்... அந்த இளமை திரும்புமா?

By காமதேனு

ப்ரியதர்ஷன் இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகவுள்ள ‘மாராக்கர்’ படத்தில் மோகன்லால், அவரது மகன் ப்ரணவ், கீர்த்தி சுரேஷ், அர்ஜுன், ப்ரியதர்ஷன் மகள் கல்யாணி ப்ரியதர்ஷன் என்று பெரிய பட்டாளமே நடிக்கவிருக்கிறது. சுவாரசியம் என்னவென்றால் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் சிவனை அணுகினார் ப்ரியதர்ஷன். வேறொரு படத்தில் பிஸியாக இருக்கிறேன் என்று மறுத்துவிட்ட அவர், தனியே இன்னொரு ‘மாராக்கர்’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்!
எந்த மாராக்கர் முதலில் வரும்?!

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் படத்தின் நாயகியாக மேகா ஆகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தப் படத்தில் மற்றொரு நடிகையாக கத்ரீன் தெரசாவும் இணைந்திருக்கிறார். ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படத்தையும் முடித்துவிட்டு, அடுத்ததாக வெங்கட்பிரபுவின் ‘மாநாடு’ படத்தில் கவனம் செலுத்தவிருக்கிறார் சிம்பு.
செக்கச்சிவந்திடுச்சு... சிம்புவுக்கு கீழ்வானம் வெளுத்திடுச்சு!

தான் வளர்த்த நாய்க்கு திடீரென மிகவும் உடல்நிலை சரியில்லாமல் போனதால் அதிரடி முடிவொன்றை எடுத்திருக்கிறார் தமன்னா. “ஒரு உயிரோட மதிப்பு என்னன்னு புரிஞ்சுக்கிட்டேன். இனிமேல் ஒன்லி வெஜிடேரியன் மட்டும்தான்” என்று ஜீவகாருண்ய செல்வியாக பேட்டி கொடுத்திருக்கிறார்.
வெஜ் உங்களுக்கா, நாய்க்கா மேடம்?

பிரம்மாண்டமான விளம்பர உத்திகளுடன் ‘எந்திரன்’ உள்ளிட்ட மெகா பட்ஜெட் படங்களைத் தயாரித்து வழங்கிய சன் பிக்சரஸ் நிறுவனம், ஆட்சி மாற்றத்தால் அடக்கி வாசித்தது. இப்போது ரஜினியின் ‘பேட்ட’, விஜயின் ‘சர்கார்’ ஆகிய படங்களைத் தயாரித்துவரும் அந்நிறுவனம், அடுத்ததாக ரஜினி - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியிலும் ஒரு படத்தைத் தயாரிப்பதற்கான பேச்சுவார்த்தையில் இறங்கியிருக்கிறது! அத்துடன் 2019 முதல், மாதம் ஒரு படத்தின் உரிமையைப் பெற்று வெளியிடவும் திட்டமிட்டிருக்கிறார்களாம்.
ராசியான கை, வெற்றிகளைக் குவிக்கட்டும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE