அப்பா... அப்பா... மியூசிக்..!- சாதனைப் படிக்கட்டில் ‘சரிகமப’ சஹானா!

By காமதேனு

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் ‘சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் - சீசன் 2’ நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் ‘சுட்டீஸ்’ குழுவில் கொஞ்சும் தமிழில் பாடுவதோடு, கூடவே கீ போர்டும் இசைத்து பாராட்டுகளை அள்ளி வருகிறார் சஹானா. பார்வை மாற்றுத் திறனாளி சிறுமியான சஹானா, தனது இசை ஆர்வம் குறித்து ஆனந்த மழலையில் அள்ளித் தந்தது...

‘‘கைக்குழந்தையா இருக்கும்போதே கீ போர்டு மேல ஈர்ப்பா இருப்பேன்னு எங்க அப்பா சொல்வாங்க. பெரியவளா வளர்ந்ததும் பள்ளிக்கூடம் போகலாம்னு வீட்ல சொன்னப்பக் கூட ‘கீ போர்டு கிளாஸுக்குத்தானே’னு கேட்டவ நான்! எனக்கிருந்த ஆர்வத்தைப் பார்த்துட்டு அம்மாவும், அப்பாவும் மியூசிக் கிளாஸ்ல என்னையச் சேர்த்துவிட்டாங்க. இப்போ மூன்றாம் வகுப்பு படிக்கிறேன். இவ்ளோ சின்ன வயசிலேயே இசை, பாடல் வழியே எல்லோரையும் ஈர்க்க முடியுதேன்னு ரொம்பவே சந்தோஷமா இருக்கு. ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ் மாதிரி இப்போ `சரிகமப’ நிகழ்ச்சியிலும் ஃப்ரெண்ட்ஸ் நிறைய பேர் கிடைச்சாச்சு. ஷூட் நேரம் போக ரொம்ப நேரம் விளையாடுவோம். இந்த புது ஃப்ரெண்ட்ஸ் புதுசு புதுசா நிறைய விளையாட்டுகளைக் கத்துத் தர்றாங்களே..!” என்று குறும்பாகச் சிரித்த சஹானா, தொடர்ந்து பேசினார்.

“டிவியிலும் எஃப்.எம்மிலும் பாட்டுக் கேட்கும்போது, ‘இது ராஜா அங்கிள் பாட்டு... இது ரஹ்மான் அங்கிள் பாட்டு...’ன்னு அப்பா சொல்வாங்க. சமீபத்துல எஸ்.பி.பி. அங்கிள் எங்க ஷோவுக்கு வந்தாங்க. நான் பாடுனத கேட்டுட்டு, ‘சஹானா நீ தெய்வக்குழந்தை. இன்னும் பல சாதனைகள் புரியணும்!’ன்னு வாழ்த்தினாங்க. நமக்கு பிடிச்ச அங்கிள் முன்னாடி பாடி பாராட்டு வாங்குறதைவிட ஹேப்பியான விஷயம் எதுவுமே இல்லைன்னு அப்ப தோணுச்சு. அப்பா, அம்மா, மியூசிக் - இதுதான் என்னோட உலகம். திறமையான மியூசிக் கம்போஸரா வரணும்கிறதுதான் என்னோட ஆசை’’ என்று சொல்லும் செல்ல மகளை அப்பா நிரன்குமாரும், அம்மா ஸ்ரீலோகினியும் அப்படியே அள்ளி அணைத்துக்கொள்கிறார்கள்!

கனவுகளை வென்று சாதிக்கட்டும் இந்த சஹானா!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE