தமிழில் ஸ்பூஃப் வகைத் திரைப்படத்தை ‘தமிழ்ப் படம்’ மூலம் அறிமுகப்படுத்திய சி.எஸ்.அமுதனின் இரண்டாம் முயற்சி ‘தமிழ்ப் படம் 2’.
முதல் படத்தைப் போலவே கலாய்ப்புக் காட்சிகளைத் தொடுப்பதற்கான கண்ணியாகத்தான் இந்தப் படத்தின் கதையை எடுத்துக்கொள்ளலாம். சாதிக் கலவரம் ஒன்றை தன் அறுவைப் பேச்சாலேயே அடக்கிய பிறகு காவல்துறையினர் கெஞ்சிக்கேட்டுக்கொள்வதால், மறுபடியும் காவல் துறையில் சேர்கிறார் சிவா (கதாபாத்திரத்தின் பெயரும் அதுவே). பதவியேற்றவுடனேயே அவரது மனைவி ப்ரியா (திஷா பாண்டே) தாதா ‘பி’ (சதீஷ்) அனுப்பிவைத்த ‘டெட்மீ’ செல்போன் வெடித்து இறக்கிறார்.
பிறகு, புதிய காதலி. அவரையும் கொல்லும் வில்லன் ‘பி’. ஒரு கட்டத்தில் வில்லனை சிவா கொன்றுவிடுகிறார். ஆனாலும், ஹாலிவுட் பட பாணியில் வில்லன் உயிர்த்தெழ, அதற்கான காரணத்தைச் சொல்ல 3,000 ஆண்டுகளுக்கு முன்னால் கதை செல்கிறது. அப்புறம், நிகழ்காலத்துக்கு வந்து வில்லனை அசுரவதம் செய்வதுதான் மீதிக்கதை.
இவ்வளவு உயரமான தென்னை மரத்துல இருந்து எப்படி தேங்காய்ப் பறிப்பேன் என்று ஒரு கூன்விழுந்த கிழவர் வருத்தப்பட்டுக்கொண்டிருக்கையில், சுமோவைப் பறக்கவிட்டுத் தென்னை மரத்தில் மோதி, தேங்காய் பறித்துக்கொடுத்து அறிமுகமாகிறார் ‘அகில உலக சூப்பர் ஸ்டார்’ சிவா. சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பேசியே கிளைமாக்ஸ் வரையில் பின்னியெடுக்கிறார் சிவா. நாயகி ஐஸ்வர்யா மேனனின் பாத்திரம் தமிழ் சினிமாவின் ‘லூசுத்தனமான’ கதாநாயகிகளுக்குச் செய்யப்பட்ட சமர்ப்பணம்.
வில்லனாக வருகிற சதீஷ், தமிழ் சினிமாவின் பிரபல வில்லன்களைப் போல் மட்டுமல்லாமல் ஹாலிவுட் வில்லன் கெட்டப்பிலும் வந்து சிரிப்பூட்டுகிறார். கல்லூரி முதலாமாண்டு படிக்கும் நண்பர்களாக வரும் சந்தானபாரதி, ஆர்.சுந்தராஜன், மனோபாலா ஆகியோரில் சந்தானபாரதி மட்டுமே சிரிக்க வைக்கிறார்.
தமிழ், ஆங்கிலப் படங்களோடு சமகால அரசியல் நிகழ்வுகள் என அத்தனையையும் கலாய்ப்பதற்காக முயற்சி எடுத்திருக்கிறார் சி.எஸ். அமுதன். குறிப்பாக, போலீஸ் சம்பந்தப்பட்ட படங்களை ஏகத்துக்கும் நக்கலடித்திருக்கிறார். நிறையவே க(லக)லாய்ப்புகள் வருவதால், இது எந்தப் படத்தின் பகடி என்று பார்வையாளர்கள், பக்கத்தில் இருப்பவர் களுடன் கலந்தாலோசிக்கிறார்கள். இருந்தாலும், இசையமைப்பாளர் கண்ணனின் புத்திசாலித்தனமான பின்னணி இசை ஞாபக அலைகளை மீட்டி விடுகிறது.