‘லூசியா’ என்ற ஒரே படத்தில் ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் கன்னட திரையுலகை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குநர் பவன் குமார். அவர் இயக்கிய ‘யு-டர்ன்’ திரைப்படமும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாராட்டுகளை அள்ளியது. சமந்தாவை நாயகியாக வைத்து அப்படத்தைத் தமிழிலும் தெலுங்கிலும் இயக்கிவரும் பவன் குமாரை ‘காமதேனு’ இதழுக்காகச் சந்தித்தேன்.
‘யு-டர்ன்’ கன்னடப் படத்துக்குப் பிறகு இரண்டு ஆண்டுகளாக வேறெந்தப் படமும் இயக்கவில்லையே ஏன்..?
சமந்தாவுக்கும் எனக்கும் இடையிலான எழுதப்படாத ஒப்பந்தம்தான் காரணம். ‘யு-டர்ன்’ படத்துக்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால், இந்தப் படத்தை தமிழ், தெலுங்கில் ரீ மேக் செய்துவிட்டுத்தான் அடுத்த படம் பண்ணுவது என்பதில் நானும் சமந்தாவும் உறுதியாக இருந்தோம்.
‘யு டர்ன்’ படம் கன்னடத்தில் வெளியாவதற்கு முன்பாகவே தமிழ், தெலுங்கிலும் இப்படத்தைப் பண்ணுவது பற்றி நானும் சமந்தாவும் விவாதித்துக்கொண்டிருந்தோம். நான் இயக்கவில்லை என்றால் சமந்தா இப்படத்தில் நடித்திருக்க மாட்டார். நானும் வேறொருவரை வைத்து இயக்க விரும்பவில்லை. ஒரு கட்டத்தில், இந்த ரீமேக்குகளில் வேறு யாராவது இயக்கி வேறு ஒரு நடிகை நடிப்பார் என்ற நிலைகூட இருந்தது. ஆனால், இறுதியாக ‘யு டர்ன்’ ரீமேக் உரிமைகளை வாங்கிய தயாரிப்பாளர்கள் எங்கள் இருவரையுமே ஒப்பந்தம் செய்துவிட்டார்கள்.