வில்லனைப் பழிவாங்கத் துரத்துகிறார் நாயகன். ‘யார்ரா நீ?’ என்ற கேள்வியை நாயகனிடம் கேட்டுக்கொண்டே ஓடுகிறார் வில்லன். ஏன் துரத்துகிறார் என்பதை இறுதி வரைக்கும் நீட்டித்துச் சொல்லியிருக்கும் படமே ‘அசுரவதம்’
வழக்கமாக அடுக்கடுக்காய் வசனம் பேசும் சசிகுமாருக்கு இப்படத்தில் பெரிதாக வசனம் இல்லை. வில்லனை மிரட்ட ஆவேசம், மருத்துவமனையில் நந்திதாவைப் பார்க்கும்போது கரிசனம், வெளிநாட்டுக்குப் போகும் விஷயத்தை மகளுக்குக் கடத்தும்போது பாசம் என உடல்மொழியால் வசீகரிக்கிறார்.
வில்லனாக எழுத்தாளர் வசுமித்ர. பயம், கோபம், ஆற்றாமை என ஒவ்வொரு காட்சியிலும் மிக நேர்த்தியாக நடித்திருக்கிறார். சசிகுமாரிடம் ‘யார்ரா நீ?’ எனக் கேட்பது, காவல்துறை அதிகாரி முன்பு அமர்ந்துகொண்டு தனக்குத்தானே புலம்புவது, மிஸ்டு காலை அட்டெண்ட் செய்யத் துடிப்பது ஆகியவற்றில் ஈர்க்கிறார்.
நாயகன் கொல்வதற்கு நாள் குறித்ததுமே, வில்லனும் முறுக்கிக்கொண்டு நிற்காமல், பழைய பகைவர்களையெல்லாம் அழைத்து சமாதானம் சொல்வது, நாயகனுக்குப் பயந்து ஓடுவது, ஒளிவது, வேறு வழியே இல்லாதபோது எதிர்த்து நிற்பது போன்ற காட்சியமைப்புகள் யதார்த்தம்.