சஞ்சு- விமர்சனம்

By காமதேனு

புகழ்பெற்ற பாலிவுட் நடிகரான சஞ்சய் தத்தின் வாழ்க்கையை அவரது தரப்பிலிருந்து விவரிக்கும் படம்தான் ‘சஞ்ஜு’.

ஆயுதம் வைத்திருந்த வழக்கில் சஞ்சய் தத்துக்கு (ரன்பீர் கபூர்) தடா சட்டத்தின் கீழ் ஆறு ஆண்டு சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்வதிலிருந்து படம் தொடங்குகிறது. அவர் ஆயுதம் வைத்திருந்தது ஏன், அவர் உண்மையிலேயே தீவிரவாதியா? என்று தனக்கான ஒரு தன்னிலை விளக்கத்தைத் தயாரித்துத் தருகிறது திரைக்கதை.

இளம் வயதில் போதைக்கு அடிமையாகும் சஞ்சய்யை மீட்பதற்காக அவரது தந்தை சுனில் தத் (பரேஷ் ராவல்) நடத்தும் போராட்டம், தடா சட்டத்தின் கீழ் சிறை செல்லும் சஞ்சய்யை மீட்பதற்கான போராட்டம் என்று இரண்டு போராட்டங்களுடனாக சஞ்சய்யின் வாழ்க்கை நம்முன் விரிகிறது.

ரன்பீர் கபூர் தோற்றத்திலும் உடல்மொழியிலும் சஞ்சய் தத்தை திரையில் கொண்டுவரக் கடுமையாக உழைத்திருக்கிறார். பரேஷ்ராவல் உணர்ச்சிகளை அடக்கிவாசித்திருக்கிறார். கமலேஷாக வரும் விக்கி கவுஷல் ஒரு முன்னுதாரண நண்பனைக் கண் முன் நிறுத்துகிறார். சஞ்சய்யின் வாழ்க்கை வரலாற்றை எழுதுபவராக அனுஷ்கா ஷர்மா, சஞ்சய்யின் மனைவி மான்யதா தத்தாக தியா மிர்ஸா, காதலியாக சோனம் கபூர் ஆகியோர் தங்கள் பங்கைக் குறையின்றிச் செய்திருக்கிறார்கள். சஞ்சய் தத்தின் தாய் நர்கீஸின் வேடத்தில் நம்மை நெகிழ வைக்கிறார் மனீஷா கொய்ராலா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE