டிக் டிக் டிக்: திரை விமர்சனம்

By காமதேனு

இந்தியாவின் முதல் விண்வெளி த்ரில்லர் என்ற அடைமொழியோடு வெளியாகியிருக்கும் படம். 200 டன் எடை கொண்ட விண்கல்லால், 4 கோடி மக்கள் பூமியில் மரணமடையும் ஆபத்து என்கிறார்கள். ஆபத்தை ஜெயம் ரவி குழுவினர் எப்படித் தடுக்கிறார்கள் என்பதே ‘டிக்:டிக்:டிக்’ படத்தின் கதை.

வழக்கமான கதைகளிலிருந்து வேறுபட்டு விண்வெளி தொடர்பான ஒரு கதையைத் தேர்ந்தெடுக்க தைரியம் வேண்டும். விண்வெளி தொடர்பாக சராசரி ரசிகனின் அறிவைக்கூட கணக்கில் கொள்ளாமல், திரைக்கதையையும் திருப்பங்களையும் அமைத்திருப்பது கொடுமை!

ஜெயம் ரவி குழுவினரின் விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு, சில மணி நேரங்களுக்குள் நிலாவுக்குச் செல்வதெல்லாம் உச்சபட்ச நகைச்சுவை. விண்கலத்தில் நிலாவைச் சென்றடைய எவ்வளவு நேரம் ஆகும் என்று கூகுளில் போட்டுப் பார்த்தாலே தெரிந்துவிடுமே! இப்படிப் படம் நெடுகிலும் லாஜிக்கை அணுகுண்டு வைக்காமலே அசால்ட்டாகத் தகர்த்திருக்கிறார்கள்.

பூட்டிக்கிடக்கும் வீட்டுக்குள் புகுந்து டி.வியைத் தூக்கிவருவதுபோல் அந்நிய நாட்டு விண்வெளி நிலையத்தில் புகுந்து 200 கிலோ டன் அணு ஏவுகணையை ஜெயம் ரவி அலேக்காக ‘ஆட்டையைப் போட்டுவிட்டு’ வரும் காட்சியை ஹாலிவுட் ஆசாமிகள் பார்த்தால், ‘வாவ்! இட்ஸ் எ சினிமாட்டிக் மிராக்கிள்’ என்று தலைசுற்றிப் போவார்கள். இந்த லெவலுக்குப் போனவர்கள், படத்தின் ஒரு பாட்டில் வருவதைப் போல, கடைசியில் நிஜமாகவே நிலாவைத் தூக்கிக்கொண்டு ஜெயம் ரவி பூமிக்கு வந்து தன் மகனுக்குப் பரிசாகக் கொடுப்பதுபோலக் காட்டியிருக்கலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE