மும்பை தாராவி பகுதியில், ‘நிலம் எங்களது உரிமை’ எனப் போராடும் ஒரு மக்கள் தலைவனின் கதையே ‘காலா'.
தாராவியில் வசிக்கும் நகர்ப்புற ஏழைகள் கூட்டத்தின் தலைவன் காலா. அடிப்படை வசதிகளே எட்டிப்பார்க்காத தாராவியில், ‘ப்யூர் மும்பை’ என்ற கோஷத்தோடு அங்கு வசிக்கும் மக்களின் நிலத்தைக் கபளீகரம் செய்ய முயற்சி நடக்கிறது. அதை எதிர்த்து வில்லனோடு காலா நடத்தும் அறச்சீற்றமே படத்தின் ஒருவரிக் கதை!
படத்தில் நிலம் சார்ந்த அரசியலைப் பதிவு செய்திருக்கும் இயக்குநர் இரஞ்சித், கமர்ஷியல் படமா, குடும்பப் படமா என்று தடுமாறியிருப்பதும் தெரிகிறது. அரசை அழுத்தமாக விமர்சிக்கும் வசனங்களை, ரஜினியை விட்டே ஆங்காங்கே மசாலா தூவி தெறிக்கவிட்டுள்ளார்.
பழைய காதலிக்காக உருகுவது, “என் உலகம் செல்வி” என்று மனைவியை விட்டுக் கொடுக்காமல் இருப்பது, “என்னைக் கேட்காம நீ வந்துட்ட... என் பெர்மிஷன் இல்லாம நீ போக முடியாது...” என்று நானா படேகருக்கு தாராவியின் சூழலை உணர்த்துவது, காவல் நிலையத்தில் திரும்பத் திரும்ப “ஆமா... யார் இவரு?” என்று காமெடி பண்ணுவது எனப் பின்னியிருக்கிறார் ரஜினி.