ஸ்டேன்லி குப்ரிக்கின் ‘2001:ஒரு விண்வெளிப் பயணம்’ (2001: A Space Odyssey) படத்தை முதல் தடவை பார்த்து முடித்தவுடன் இந்தப் படத்தை ஏன் இப்படிக் கொண்டாடுகிறார்கள் என்பது புரியாமல் விழித்தேன். ஆனால், அடுத்த சில நாட்கள் அந்தப் படம் என் ஆழ்மனதில் ஏதோ ரசவாதம் ய்துகொண்டிருப்பதை உணர முடிந்தது. நான் மட்டுமல்ல, 1968-ல் முதன்முறையாக இந்தப் படம் வெளியானபோது பெரும்பாலானோரின் நிலையும் இதுதான். படம் வெளியாவதற்கு ஒருசில நாட்களுக்கு முன்பு திரையிடப்பட்ட சிறப்புக் காட்சியின்போது அந்தப் படத்தைத் தயாரித்த எம்.ஜி.எம். நிறுவனத்தின் அதிகாரிகள் பாதியிலேயே வெளியேறினார்கள். அரங்கில் நிறையச் கேலிச் சத்தங்களும் எழுந்தன.
தொடக்கத்தில், ‘ரொம்பவும் கொட்டாவி விட வைக்கும் படம்’ என்றெல்லாம், பத்திரிகைகள் எழுதின. ஒருசில நாட்களில் இந்த நிலையில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டது. படம் யாருக்கும் புரியவில்லை என்றாலும், மக்கள் கூட்டம் திரையரங்குக்குப் படையெடுத்தது. இதற்கு ஹிப்பிகளும் முக்கியக் காரணம். போதை மருந்து உட்கொள்ளும்போது அனுபவிப்பது போன்ற உணர்வுகளை இந்தப் படத்தில் அவர்கள் கண்டுகொண்டார்கள். திரையில் படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே ‘இதோ கடவுள், இதோ கடவுள்’ என்று கத்தியபடி ஒருவர் ஓடியிருக்கிறார். விளைவு, படம் ‘கல்ட் ஹிட்’!
நாற்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் மனிதக் குரங்குகள் கூட்டத்திலிருந்து கதை தொடங்குகிறது. ஒரு சிறிய தண்ணீர்க் குட்டையை யார் உரிமை கொள்வது என்று குரங்குக் கூட்டங்கள் இரண்டுக்கும் இடையிலான போராட்டம். இதற்கிடையே அந்த இடத்தில் கறுப்பாக ஒரு செவ்வகக் கல் ஒன்று நிற்கிறது. (இயற்கையில் சதுரம், செவ்வகம் போன்ற வடிவங்கள் கிடையாது). அந்தச் செவ்வகக் கல்லைச் சுற்றி என்ன செய்வதென்று தெரியாமல் இங்கும் அங்கும் குரங்குகள் சத்தம் போட்டபடி ஓடுகின்றன.
அந்தக் கல் ஏதோ ஒரு வகையில் அங்குள்ள குரங்கொன்றிடம் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இறந்து கிடந்த விலங்கொன்றின் எலும்பை ஆயுதமாகப் பயன்படுத்தி எதிரிக் கூட்டத்துக் குரங்கொன்றைக் கொன்று தண்ணீர்க் குட்டையின் உரிமையைக் கைப்பற்றுகிறது குரங்கு. அதற்குப் பிறகு நாற்பது லட்சம் ஆண்டுகளைக் கடந்து 2001-க்குக் கதை செல்கிறது. அதே போன்றதொரு கல் நிலவில் புதைக்கப்பட்டிருக்கிறது. அதை ஆய்வு செய்வதற்காக விண்கலத்தில் வீரர்கள் பயணம் செய்கிறார்கள். 18 மாதங்கள் கழித்து இன்னொரு விண்கலத்தில் இரண்டு வீரர்களும், உறக்க நிலையில் (hibernation) மூன்று வீரர்களும், ஒட்டுமொத்த விண்கலத்தையும் கட்டுப்படுத்தும் செயற்கையறிவுத் தொழில்நுட்பமான ஹால் கணினியும் வியாழன் கோளுக்கருகில் தென்பட்ட இன்னொரு செவ்வகக் கல்லை ஆய்வு செய்யப் போகிறார்கள்.