மும்பையில் இருந்தும் தாராவியை எட்டிப் பார்க்காதவள் நான்!- ‘காலா’ ஹுமா குரேஷி குஷி பேட்டி

By காமதேனு

‘காலா’வின் காதலி சரினா, தான் நடித்த முதல் தமிழ்ப்படத்தை சென்னையில்தான் பார்க்க வேண்டும் என்று ஓடிவந்திருக்கிறார். மும்பையிலிருந்து வந்திருந்த ஹுமா குரேஷியை, ‘காமதேனு’ இதழுக்காகச் சந்தித்தேன்.

உங்கள் பெயரைச் சொன்னாலே, தமிழ் ரசிகர்களுக்கு இனி ‘காலா’ ரெஸ்டாரென்ட் காட்சிதான் ஞாபகம் வரும். அதில் நடித்த அனுபவத்தைச் சொல்லுங்களேன்.

தியேட்டரில் கவனித்தேன். அந்தக் காட்சியை அத்தனை பேரும் அப்படி ரசித்தார்கள். ஆனால், படமாக்கும் போது நான் பட்டபாடு இருக்கிறதே? அது ரொம்பக் கடினமான காட்சியாக இருந்தது. அந்தக் காட்சிக்காக மும்பையில் இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. ஏற்கெனவே தொடர்ந்து நான்கைந்து நாட்கள் ரஜினியுடன் நடித்தும், அந்த எமோஷனல் காட்சியில் நடித்தபோது பதற்றமாக இருந்தேன். திடீரென்று மழை வேறு பெய்யத் தொடங்கியது. டேக் ஓகே ஆகாமல் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. ஆனால், ஒட்டுமொத்தக் குழுவும் அன்பானவர்கள். நான் அவர்கள் பொறுமையைச் சோதித்தாலும், யாரும் என்னிடம் ஒரு முறைகூட கோபித்துக்கொள்ளவில்லை. அதுவே என்னை சகஜமாக இருக்க வைத்துவிட்டது. அந்தக் காட்சியின் வெற்றியில், பொறுமை காத்த அத்தனை பேருக்கும் பங்கிருக்கிறது.

முதல் தமிழ்ப் படமே ரஜினியோடு. எப்படிக் கிடைத்தது இந்த வாய்ப்பு?
தனுஷ் என் நண்பர். நாங்கள் இணைந்து ஒரு படத்தில் நடிப்பது பற்றி பேசிக்கொண்டிருந்தோம். திடீரென்று ஒரு நாள் அழைத்து ‘என் அடுத்த படத்தில் நீங்கள் நடிக்கிறீர்கள்’ என்றார். அவர் நடிக்கும் படம் என்று நினைத்தேன். ‘இல்லை இது பெரிய படம். இன்னும் சிறப்பானது. ரஜினி சார் படம்’ என்று சொன்னபோது ஜோக் அடிக்கிறார் என்று நினைத்தேன். பிறகு சென்னைக்கு வந்து இரஞ்சித் சாரைச் சந்தித்தேன். அவரது கதையும் அவர் அதைச் சொன்ன விதமும் மிகவும் பிடித்தது. மும்பைக்கு ஃபிளைட்ஏறுவதற்கு முன்பே, ‘இந்தப் படத்தில் நடிக்கிறேன்’ என்று சொல்லிவிட்டேன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE