சின்னத்திரையில் பாசிட்டிவ், நெகட்டிவ் ரோல் என இரு அவதாரத்திலும் அசத்துகிறார் மகாலட்சுமி. ‘‘தாமரை, தேவதையைக் கண்டேன், கண்மணின்னு மூணு சீரியல்கள்ல பிஸி. ஆனாலும், மாசத்துல 15 நாள்தான் ஷூட்டிங் போறேன்’’ என்கிறார்.
‘ஏன் அப்படி?’ என்றால்... ‘மம்மீ…’ என ஓடிவரும் மகன் சச்சினைக் கட்டி அணைத்துத் தூக்கியவாறே... ”இதோ... இவர்தான்’’ என்கிறார். ‘‘சச்சினுக்கு 3 வயது. இவனோட அப்பா கிரிக்கெட் வீரர். அதனாலயே எங்க ரெண்டு பேருக்கும் பிடிச்சு இந்தப் பேரை வச்சோம். இவனுக்கு கிரிக்கெட் பிடிக்குமான்னு இப்போ தெரியல. எப்படியும் இன்னும் 2 வருஷம் ஆகும். இப்போ நான் ஒரு அம்மாவா இவன்கூட அதிக நேரம் செலவழிக்கணும்னு இருக்கேன். இவனுக்குப் பிடிச்சதை சமைத்துக் கொடுத்து இவனையே பார்த்துக்கிட்டிருக்கத்தான் எஞ்சிய 15 நாட்களுக்கான கால்ஷீட்” என்கிறார் மகாலட்சுமி.
“ஒரு காலத்தில் சன் மியூசிக்கில் பாராட்டை அள்ளும் ஆங்க்கரா இருந்தீங்க? அதெல்லாம் இப்போ மறந்துட்டீங்களா?’’ என்று கேட்டால்,
‘‘சே... சே... எப்படி மறக்க முடியும்? கிட்டத்தட்ட 10 வருஷங்கள் ஓடியாச்சு. நான், ஹேமா ஹெக்டே, நிஷா, சந்தியா, பிரஜின், ஆனந்த கண்ணன்னு ஒரு பட்டாளமே இருந்தோம். இப்போ நிஷாகூட மட்டும் டச்ல இருக்கேன். மத்தவங்கக்கிட்ட பேசி ரொம்ப நாளாச்சு. கல்லூரி நாட்கள் மாதிரிதான். அது ஒரு ஸ்வீட் மெமரீஸ் காலம்’’ ஃபீலிங்ஸ் கொட்டுகிறார் மகா!