’கவுண்டமணி சார் சொன்னது சத்தியமான வார்தைகள்’- சீக்ரெட் உடைக்கும் ‘செஞ்சுரி’ பாபு!

By காமதேனு

டயலாக்கே இல்லாமலும் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு, சத்தமேயில்லாமல் திரையில் ‘செஞ்சுரி’ அடித்திருக்கிறார்! ‘விஸ்வாசம்’ அவரது 100-வது படம். மேலும், ‘தளபதி 62’, ‘சிவகார்த்திகேயன் - ரவிக்குமார் படம்’, ‘ஜுங்கா’, ‘கடைசி விவசாயி’ எனக் கிட்டத்தட்ட 40 படங்கள் கைவசம் வைத்திருக்கும் அவரை சாலிகிராமத்தில் உள்ள அலுவலகத்தில் சந்தித்தேன்.

“பல கம்பெனிகளில் வாய்ப்புக் கேட்டு ஏறி ஏறி இறங்கியிருக்கேன் அண்ணே... ஒருதடவ தி.நகர்ல இருக்கும்போது. ஒரு இயக்குநரைப் பாக்குறதுக்காக சாலிகிராமத்துல இருந்த அவரோட ஆபீஸுக்குப் போகச் சொன்னாங்க. அப்ப, கையில இருந்தது வெறும் 12 ரூபாய்தான். பஸ்ல போனா நைட்டு வீடு திரும்ப காசு இருக்காதேன்னு தி.நகர்லருந்து சாலிகிராமத்துக்கு நடந்தே போனேன். அன்னைக்கு நடந்த இந்தக் கால்கள் இப்ப நிற்கக்கூட நேரமில்லாம ஓடிக்கிட்டே இருக்கு” என்று தன் கால்களைத் தடவியபடி அவர் சொல்ல,சட்டென மனது பாரமாகிவிட்டது.

“10-ம் வகுப்பு ஃபெயிலாகிட்டேன். அப்பா ராணுவ வீரர் என்பதால், பெங்களூருவில் உள்ள ராணுவக் குடியிருப்புல தோட்ட வேலை பார்த்தேன். ராணுவத்துல வேலைக்குப் போக நினைச்சப்ப, ஸ்போர்ட்ஸ் கோட்டாலகூட வேலை கிடைக்கல. சரி… கிடைச்ச வேலைய செய்வோம்னு சுத்த ஆரம்பிச்சேன்” என்று சொல்லும் பாபு, பல இடங்களுக்கு வேலை கேட்டு அலைந்திருக்கிறார்.

இவரைக் கலைத்துறை நோக்கித் திருப்பியவர் ‘லொள்ளு சபா’ இயக்குநர் ராம்பாலா. ‘லொள்ளு சபா’வில் தொடர்ந்து 7 வருடம் தாக்குப் பிடித்தவர், பிறகு, ‘மாமா மாப்ளே’, ‘மை நேம் இஸ் மங்கம்மா’ என்று சீரியல்களில் சிறுசிறு வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். “சீரியல்ல நடிக்கப் போனா, ஒரு நாளைக்கு 50 ரூபா கொடுப்பாங்க. லொள்ளு சபா டீம்கூட போய் உட்கார்ந்து டயலாக்குக்கு உதவி பண்ணுனா, 100 ரூபா கொடுப்பாங்க. அதே லொள்ளு சபால நடிச்சப்போ 500 ரூபாய் கொடுத்தாங்க. ‘இந்த காமெடி மூஞ்ச வைச்சுக்கிட்டு டயலாக் எல்லாம் எழுதாதடா... போய் நடி’னு ராம்பாலா சார்தான் என்ன நடிக்க வைச்சார். திடீர்னு லொள்ளு சபாவையும் நிறுத்திட்டாங்க. மறுபடியும் வாழ்க்கை போராட்டமாகிருச்சு” என்கிறார் பாபு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE