தெலுங்கில் ‘மகாநடி’யாக உருவாகி, தமிழ் பேசியிருக்கிறது ‘நடிகையர் திலகம்’!
‘பாரதி’, ‘காமராஜர்’, ‘பெரியார்’, ‘ராமானுஜர்’ போன்றவர்களின் வரலாற்றைச் சொன்ன தமிழ்ப் படங்கள், அந்த சரித்திர நாயர்களுக்கான திரை காணிக்கைகள். ஆனால், இவற்றில் பெரும்பாலானவை ஆவணம் எனும் கண்ணோட்டத்தையே உருவாக்கின. ‘காந்தி’, ‘தங்கல்’ போன்றவை ஜனரஞ்சக சுவாரஸ்யத்திலும் சேர்த்தே வெற்றி பெற்ற சில உதாரணங்கள். ‘நடிகையர் திலகம்’ படத்தைத் தாராளமாக அந்த வெற்றி வகையறாவில் சேர்க்கலாம்.
கள்ளம் கபடமில்லாதவள், பிடிவாதம் கொண்டவள், கருணையின் வடிவமானவள், அன்பு மனைவி, பாசமான தாய், எளிமையான குடும்பப் பெண், சிகரத்தைத் தொட்ட நட்சத்திரம் எனப் பல பரிமாணங்கள் கொண்ட நடிகை சாவித்திரியை மறுபடி திரையில் வாழ வைத்திருக்கிறார் கீர்த்தி.
முகபாவனை, நடை, உடை என்று எல்லாவற்றிலுமாகப் படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில், கீர்த்தி சுரேஷ் மறைந்து சாவித்திரி மட்டுமே நமக்குத் தெரிய ஆரம்பிக்கிறார். இடது கையால் எழுதுவது, கார் ஓட்டுவது, கிரிக்கெட் ஆடுவது, யானை மேல் ஏறுவது என்று சாவித்திரியின் பன்முகத்தையும் நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார்.