’நாங்க மூணு பேருமே ஹீரோயின்தான்!’ - பாட்டி, மகள், பேத்தி அசத்தும் அரட்டை

By காமதேனு

நீலாங்கரையின் கடற்கரைக் காற்றுக்கு ஹாய் சொல்லியபடி நிற்கிறது அந்த வீடு. அழைப்பு மணி அடித்தால், பொக்கே புன்னகையோடு கதவைத் திறக்கிறார் கீர்த்தி சுரேஷ். லட்சக்கணக்கான ரசிகர்கர்களை ஈர்த்து வைத்திருக்கும் கீர்த்தியின் வசீகரப் புன்னகை, ஒரு அழைப்பு மணி அடித்தவுடன் கிடைப்பது ஆச்சரியம்தானே? “இந்த வீட்டுக்கு வந்து 20 நாள்தான் ஆச்சு... இங்க வர்ற முதல் ரிப்போர்ட்டர் நீங்கதான்” என்று வரலாற்று பக்கங்களில் என் பெயரைப் பதித்தபடியே வரவேற்றார் கீர்த்தி.

“முதல் முறையா பாட்டி, அம்மா, நான் மூணு பேரும் சேர்ந்து ஃபேமிலி இன்டர்வியூ கொடுக்கப்போறோம்... அம்மா, பாட்டி ரெண்டு பேரும் காலையிலருந்து மேக்கப் போட்டுட்டு, டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்காங்க. ரெண்டு சீனியரும் என்ன பிளான் பண்ணிட்டு இருக்காங்கன்னு தெரியலை” என்று குறும்பாகச் சிரித்தபடி நம்மை வீட்டுக்குள் அழைத்துச் செல்கிறார் கீர்த்தி. வரவேற்பறை சோபாவுக்கு நேரெதிரே மர்லின் மன்றோ ஓவியங்கள். “எனக்கு இவங்களை ரொம்பப் பிடிக்கும். எவ்ளோ பெரிய சினிமா பர்சனாலிட்டி...” என்கிறார்.

ஒரு கப் காபி முடியும்போது இறங்கி வருகிறார் கீர்த்தியின் அம்மா மேனகா. ‘நெற்றிக்கண்’ படத்தின் ‘ராமனின் மோகனம்’ பாடலில் காட்டிய அந்த நளினப் புன்னகை இன்னும் அவர் முகத்தில் மாறாமல் இருந்தது. “என்னோட அம்மாவுக்கு இன்னமும் மேக்கப் முடியலை. முடிஞ்சவுடனே வந்துடுவாங்க” என்று அவரும் கேலி செய்கிறார்.

“சாவித்திரி வேடத்தில் நடிக்க கீர்த்தி கொடுத்து வெச்சிருக்கணும். வளர்ந்துவர்ற ஒரு நடிகைக்கு இப்படிப்பட்ட வாய்ப்பு வர்றதுங்கிறது சாதாரண விஷயம் இல்லை. எனக்கும் எங்க அம்மா சரோஜாவுக்கும் நடிகையர் திலகம் சாவித்திரின்னா உயிர்” என்று மேனகா சொல்ல, “சாவித்திரி மேடத்தோட படங்களை அடிக்கடி பார்த்துட்டே இருப்போம்” என்று குறுக்கிடுகிறார் கீர்த்தி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE