சினிமா எடுப்பது மட்டும் அல்ல; சினிமாவை ரசிப்பதும் ஒரு கலைதான். அந்தக் கலையைப் பலருக்குக் கற்றுக்கொடுக்கவும் தமிழ் சினிமாவின் தரம் உயர பல உதவி இயக்குநர்களுக்குப் பயிற்சி அளிப்பதிலும் தன் முழு நேரத்தைச் செலவிடுபவர் ‘தமிழ் ஸ்டுடியோ’ அருண்.
சென்னை வடபழனியில் இருக்கும் இவரது ‘பியூர் சினிமா’ அலுவலகத்தில் சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து ஏற்பாடு செய்துவருகிறார். சமீபத்தில் உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு நாவல்களைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படங்களைத் திரையிட்டு அது குறித்து விவாதிக்கும் நிகழ்வு நடந்தது. விமர்சகர்களாலும் மக்களாலும் கொண்டாடப்பட்ட பல படங்களை ‘மோசமான திரைப்படங்கள்’ என்று விமர்சித்துவருபவர். இதனால், பலரது விரோதத்தைச் சம்பாதித்து வருகிறார், என்றாலும், தொடர்ந்து தன் பாதையில் முனைப்புடன் இயங்கி வரும் அருண் ‘காமதேனு’வுக்கு அளித்த பேட்டியிலிருந்து...
ஒரு படத்தையும் விட்டுவைக்காமல் விமர்சிக்கிறீர்களே? எல்லாப் படங்களையும் பார்ப்பது சலிப்பாக இல்லையா?
நான் சினிமாத் துறையில் மாற்றங்களை விரும்பி இந்தப் பயணத்தைத் தொடங்கியிருக்கிறேன். அதில் நான் தொடர்ந்து இயங்கியே ஆக வேண்டும். தமிழ் சினிமா நூறு வருடங்களை நிறைவு செய்திருக்கிறது. எனவே, மாற்றத்தைக் காணவும் அத்தனை ஆண்டுகள் தேவைப்படலாம். தமிழ் சினிமாவைப் பற்றிப் பேசியாக வேண்டும். அதனால் பிடிக்கிறதோ இல்லையோ, பெரும்பாலும் எல்லாப் படங்களையும் பார்த்துவிடுவேன். சலிப்பு தட்டி சினிமாவை வெறுக்க ஆரம்பித்தால் நான் ஆரம்பித்த பயணம் அர்த்தமற்றதாகிவிடும்.