கேரளத்து லாட்டரியில் பம்பர் பரிசு அடித்ததைப் போல, ஒரே பாடலில் புகழின் உச்சத்திற்கே சென்றவர் ஷெரில்! அட, 'ஜிமிக்கி கம்மல்' புகழ் ஷெரிலேதான். கம்மல் கலக்கிய கலக்கலுக்குத் திரைத்துறையில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்த்தால், அம்மணியோ கல்யாணத்துக்குத் தயாராகிவிட்டார்!
ஜிமிக்கி கம்மல் வெற்றிக்குப் பின்பு , மலை யாளத்தில் மாதம் இருமுறை வெளிவரும் இதழான வனிதாவின் அட்டைப்பட சூட்டிங்கில் கடந்த ஜனவரி மாதம் பங்கேற்றார் ஷெரில். மலையாள நடிகர் ஜெயசூர்யா, டப்மாஸ் புகழ் செளபாக்யா, ஜிமிக்கி கம்மல் ஷெரில் மூவரின் செல்ல அரட்டை அட்டைப்படமாக புகைப்படத்தை வெளியிட்டது வனிதா. இதற்கென நடந்த பிரத்யேக போட்டோ ஷூட்களும், வீடீயோ மேக்கிங்கும்கூட வைரலாகின. இதில், ஜெயசூர்யா நடித்து ஹிட்டான ‘சங்காதி நன்னாயால் கண்ணாடி வேண்டடா….சங்காதி நீயானால் கல்யாணம் வேண்டடா’ எனும் பாடலுக்கு நடனம் ஆடினார் ஷெரில். ’நண்பன் நன்றாக இருந்தால் கண்ணாடியே வேண்டாம்… நல்ல நண்பன் நீயாக இருந்தால் கல்யாணமே வேண்டாம்’ என்பது இதன் அர்த்தம். கல்யாணம் வேண்டாம் என்று ஆடிய முகூர்த்தமோ என்னவோ, ஷெரில் வீடு, கெட்டிமேளச் சத்தத்துக்குத் தயாராகி விட்டது.
நெருங்கிய உறவுகள், நண்பர்கள் புடைசூழ, எர்ணாகுளம் மாவட்டம், வாழக்குளத்தில் ஷெரில், ப்ரஃபுல் டாமி திருமண நிச்சயதார்த்தம் அண்மையில் நடந்தது. இதை ஷெரில் தனது முகநூல் பக்கத்திலும் பதிவேற்றியிருந்தார். அதைத் தொடர்ந்து பல ஊடகங்களும், ஷெரிலைப் பேட்டிக்காக துரத்த, ‘நிச்சயதார்த்தம் தனிப்பட்ட விசயம் தானே..! இன்னொரு சந்தர்ப்பத்தில் சந்திக்கலாம்’ எனச் செல்லமாய் குறுந்தகவல் அனுப்பி இன்னமும் எஸ்கேப் ஆகி வருகிறார்.
``இப்பவே, ஷெரிலுக்குக் கட்டுப்பாடு ஏதும் போட்டுருக் கீங்களா, மீடியாக்களிடம் சிக்காம ஜூட் விடுறாங்களே...’’ என்ற கேள்வியுடன் ஷெரிலின் வருங்கால மாப்பிள்ளை ப்ரஃபுல் டாமியைச் சந்தித்தேன். ``அப்படி யெல்லாம் இல்லை. நான் ரொம்ப ஜாலியான கேரக்டர்தான்” என நெருங்கிய நண்பனைப் போல், பசக்கென ஒட்டிக் கொள்கிறார் ஜிமிக்கி கம்மல் பிரியர். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள தொடுபுழா இவரது பூர்வீகம். எம்.பி.ஏ பட்டதாரியான டாமி, பெங்களூருவில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறார். பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் இவர்களுடையது.