பரபரப்பு, சர்ச்சை, கடும் விமர்சனங்களைக் கடந்து, ‘திருமணமே வேண்டாம்ப்பா’’ என்ற முடிவோடு ஒரு வழியாக கலர்ஸ் தமிழ் சேனலின் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியை முடித்துவிட்டு சினிமாவுக்கு வந்துவிட்டார் நடிகர் ஆர்யா.
‘எங்க வீட்டு மாப்பிள்ளை’க்கான நேரத்தை ‘ஒரு கதை பாடட்டுமா சார்’ என்கிற பாடல் வழியே கதை சொல்லும் நிகழ்ச்சியும், ‘வந்தாள் ஸ்ரீதேவி’ என்ற சீரியலும் தற்போது ஆக்கிரமித்துள்ளன. இதில், ‘வந்தாள் ஸ்ரீதேவி’யின் நாயகி அனன்யா. ‘யார் நீங்க..? இதுக்கு முன் எந்த சீரியல்லயும் பார்த்ததே இல்லையே..? என்ற கேள்வியோடு அவரைச் சந்தித்தேன்.
‘‘சின்னத்திரைக்கு நான் புதுமுகம். சொந்த ஊர் ஊட்டி பக்கத்துல மசினக்குடி. முதுமலை பக்கம்னும் சொல்லலாம். அப்பா ஊட்டியில டூரிஸ்ட் கைடு. அம்மா, அண்ணன், ஒரு தம்பின்னு சின்னக் குடும்பம். கோயம்புத்தூர்ல காலேஜ் படிப்பை முடிச்சதும் சென்னையில வேலை. அதைத் தாண்டி ஏதாவது செய்யணும்னுதான் நடிக்க வந்தேன். எனக்கு இப்படி ஒரு ஆசை இருக்குன்னு வீட்ல யாருக்குமே தெரியாது. சாருஹாசன் சார் நடித்த ‘தாதா 87’ படத்துல செகண்ட் லீட். படம் சீக்கிரமே ரிலீஸ். சின்னத்திரை நாயகி வாய்ப்பு வந்ததும் இங்கே ஓடி வந்தாச்சு. அதுவும் ஸ்ரீதேவி பெயர்ல ஒரு சீரியல். கமிட் ஆகும்போதே சேனல்ல, ‘நடிகை ஸ்ரீதேவி இறந்துட்டாங்க. அவங்க இடத்தை ரீ ப்ளேஸ் பண்ணணும்’னு சொன்னாங்க. அப்படிச் சொல்லும்போதே, ‘சின்னத்திரை ஸ்ரீதேவி’ன்னு பேர் வாங்கணும்னு சந்தோஷமா இருந்துச்சு!” என்று சொன்ன அனன்யா, சீரியலின் முதல் அத்தியாயத்தைக் குடும்பத்துடன் அமர்ந்து பார்த்து ரசிக்க ஊட்டிக்குப் பறந்திருக்கிறார்.
‘‘ஆமாம். அதுக்காகத்தான் ஊருக்கு வந்திருக்கிறேன். மலை கிராமப் பின்னணியில வளர்ந்த பெண். எங்க ஊர்ல இருக்கிறவங்க என்ன மாதிரியே வெளியில் வரணும்கிற ஆசையிலதான் சென்னை, நடிப்புன்னு புது உலகத்துக்கு வந்தேன். முதல் சீரியல், முதல் எபிசோடை சொந்தம், பந்தத்தோட பார்ப்போமேன்னு ஒரு ஆசை. அந்த சந்தோஷமே தனிதான் இல்லையா?’’ என்று பூரிக்கிறார் அனன்யா.