தமிழில் மாற்று சினிமா இயக்கம் என்பது ருத்ரையா துவங்கி பாலுமகேந்திரா வரை போராடிப் பின்வாங்கியக் களம். இப்போது அது டிஜிட்டல் தொழில்நுட்பம், பல ஊடகத் திரையிடல், உலகளாவிய திரைப்பட விழாக்களைத் தளமாகக்கொண்டு உயிர்பெறத் துவங்கியுள்ளது. மாற்று சினிமாக் களத்தில் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருபவர் ஒளிப்பதிவாளர் செழியன். அவர் இயக்கிய ‘டூ-லெட்’ தமிழ்த் திரைப்படம் சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளது. பின்னணி இசையே இல்லாமல் இயற்கையான ஒலிகளை மட்டுமே பயன்படுத்தி எடுக்கப்பட்ட பரீட்சார்த்த திரைப்படம் இது. பி.சி.ஸ்ரீராமின் மாணவர்களில் ஒருவரான செழியனின் நேர்காணலில் இருந்து…
மாற்று சினிமாவை ‘ஆர்ட் சினிமா’ என்று மக்களும் ஊடகங்களும் ஒதுக்கிய காலம் ஒன்று இருந்தது. தற்போது சூழல் எப்படி மாறியிருக்கிறது?
டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வருகை சுதந்திரத்தைக் கொடுத்துள்ளது. சினிமாவை யாரும் அணுகலாம் என்ற நிலைமை வந்துள்ளது. எளிமையான கதையை எடுக்க முடியும்; அதற்கான பார்வையாளர்களையும் பெற முடியும் என்கிற நம்பிக்கையையும் கொடுத்துள்ளது. இதுவரை 30 நாடுகள், 30 திரைப்பட விழாக்கள், 17 விருதுகள், 15 ஆயிரம் சினிமாப் பார்வையாளர்களை இந்தத் திரைப்படம் சென்றடைந்துள்ளது. வர்த்தக ரீதியாகவும் ஓர் ஆண்டுக்குள் இந்தப் படத்துக்கான முதலீடு திரும்ப வந்துவிடும் என்ற நம்பிக்கையையும் ஏற்பட்டுள்ளது.
இந்த தேசிய விருதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?