“நான் ரஜினி சாருடைய தீவிர ரசிகன். சினிமாவை ஃபேண்டஸியாக நான் பார்க்கக் காரணமே அவருடைய படங்கள் தான். இப்பவும் அவருடைய படத்தை இயக்கப்போகிறோம் என்ற சந்தோஷத்தைத் தாண்டி ஒரு சின்ன பயம் இருக்கு” என்ற கார்த்திக் சுப்பாராஜின் பேச்சில் அவ்வளவு உற்சாகம். ‘பீட்சா', ‘ஜிகர்தண்டா' மூலம் கவனிக்கவைத்தவர் கையில் இப்போது ரஜினியின் அடுத்த படம்.
யாருமே எதிர்பார்க்காதது ரஜினி பட அறிவிப்பு. எப்படி அமைந்தது இக் கூட்டணி?
‘பீட்சா' பார்த்துவிட்டு அவர் போன் பண்ணிய போதே பெரிய சாதனை செய்துவிட்டதாக நினைச்சேன். ‘ஜிகர்தண்டா' படத்துக்குப் பிறகு அவரை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘அசால்ட் சேது’ கேரக்டரைப் பற்றி ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தார். ‘கதை ஏதாவது இருந்தால் கொண்டு வரலாமா சார்' என்று கேட்டபோது ‘தாராளமா' என்று சிரித்தார்.
‘இறைவி' பண்ணும் போதே, ரஜினி சாருக்காக கதை எழுத ஆரம்பிச்சிட்டேன். அப்ப, ‘கபாலி' பட அறிவிப்பு வர ரொம்ப சந்தோஷமாகிட்டேன். இப்போ வந்த இயக்குநரோடு தலைவர் படம் பண்றாரே என்று எனக்கும் நம்பிக்கை ஏற்பட்டுச்சி. உடனே கதையை முழுசா முடிச்சுட்டுப் போய் சொன்னேன். “ரொம்ப நல்லாயிருக்கு கார்த்திக். ‘கபாலி' அறிவிப்பு இப்போதான் வந்துருக்கு. நேரம் வரும்போது பண்ணலாம்” என்று சொன்னார். ‘2.0', ‘காலா', அரசியல் என்று ஒவ்வொரு அறிவிப்பு வரும்போதும், மனதிற்குள் கொஞ்சம் பயம் இருந்தது உண்மை. கொஞ்ச நாளைக்கு முன்னால் தான் கூப்பிட்டு, “இப்போ பண்ணலாமா கார்த்திக்” என்று கேட்டார். “இவர் உண்மையாகத் தான் சொல்றாரா, நாம தலைவரை இயக்கப் போகிறோமா” என்ற எண்ணம் கொஞ்ச நேரத்துக்கு மண்டைக்குள் போகவே இல்லை. அவர் பேசுறதை மட்டும் கேட்டுட்டே இருந்தேன்.