“கடந்த 19 வருஷங்களா தொடரும் சின்னத்திரை பயணம், 16 வருஷ இல்லற வாழ்க்கை, 10 வருஷமா மகள் ஷாராவுடனான கொண்டாட்டம் இந்த மூன்று மட்டுமே இப்போது என் உலகம்’’ என்கிறார், அர்ச்சனா.
ஜீ தமிழ் சேனலில் ‘சரிகமப' ரியால்டி நிகழ்ச்சி, பிக் எஃப் எம் தொகுப்பாளினி, அவ்வப்போது மனசுக்குப் பிடித்த படங்களில் முகம் காட்டுவது என்று அப்போது போலவே அர்ச்சனா துறுதுறுவென தனது வாழ்க்கையை திட்டமிட்டிருக்கிறார். ‘காமதேனு’வுக்காக அவருடன் பேசினேன்.
‘‘ஓடி ஓடி சின்னத்திரை நிகழ்ச்சிகள் வழங்கினாலும் எல்லா நேரமும் குடும்பத்தோட நினைவுதான். அவங்களோட ஆதரவு இருந்தால் நம்மோட எந்தக் கனவையும் நிஜமாக்கிக்கொண்டே போகலாம். அந்த வகையில் கணவர் வினீத், 10 வயது மகள் ஷாரா இருவரும் என் பலம். அதுவும் மகள் ஷாரா ரொம்பவும் ஷார்ப். அவளுக்கு ஆர்ட் அன்ட் கிராஃப்ட் ரொம்ப இஷ்டம். 10 நிமிஷத்துல ஒரு விஷயத்தை மறந்துடுவேன். ஆனா, டிவியில ஒரு கோயிலைப் பார்த்துட்டா உடனே, ‘அம்மா எல்.கே.ஜி படிக்கும்போது என்னை இந்த ஊருக்கு அழைச்சுட்டுப் போனீங்க’’ன்னு ஞாபகம் வைத்துச் சொல்வாள். அந்த அளவுக்கு ஞாபகத்திறன். அது எப்படித்தான் வந்ததோன்னு இப்பவும் எனக்கு ஆச்சர்யமா இருக்கும்.
கணவர் வினீத் கடற்படையில் பணி. இப்போ கொஞ்ச நாட்களாகத்தான் இங்கே சென்னையில் இருக்கிறார். கப்பல்துறையில் பாதுகாப்புப் பிரிவில் இருப்பதால் நாங்கள் கப்பலில் பயணிக்க விருப்பினாலும் முடியாது. 1971- ல் நடந்த இந்தியா–பாகிஸ்தான் போரில் நம்மோட வெற்றியைக் கொண்டாடும் விதமாக வருஷத்துல டிசம்பர் 4-ம் தேதி ஒரு நாள் மட்டும் கடற்படை அதிகாரிகள் அவரவர் குடும்பத்துடன் 3 மணி நேரம் கப்பலில் பயணிப்போம். அந்த ஒரு நாள் போகும்போது அவர் செய்கிற வேலைகளைப் பற்றிக் கேள்விப்படும்போது தலையே சுத்தும். இவ்ளோ கஷ்டமான வேலையா வினீத் செய்கிறார் என்று பிரமித்துப்போவேன்’’ என்று குடும்பப் புராணம் பேசிய அர்ச்சனாவிடம் அடுத்து சின்னத்திரை, சினிமாவில் என்ன புதிய விஷயங்கள் என்று கேட்டால்,