Loading
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலையில் ‘வெற்றி கொள்கை திருவிழா’ என்ற பெயரில் நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டில் பங்கேற்க 2.5 லட்சம் தொண்டர்கள் வருகை தந்துள்ளதாக முதற்கட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.
தவெக மாநாட்டில் கட்சியின் தலைவர் விஜய் 100 அடி கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார்.
கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து ஏராளமானோர் நேற்று மாலை முதலே மாநாட்டு திடலுக்கு வரத் தொடங்கினர்.
பிற்பகல் 1 மணி அளவிலேயே பார்க்கிங்காக ஒதுக்கப்பட்டிருந்த 5 இடங்களில் 70 சதவீத வாகனங்கள் நிரம்பின.
காலையில் மாநாட்டுக்கு வந்த வாகனங்கள் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்றன.
நண்பகல் 2 மணி வரை மாநாட்டு திடலுக்கு சுமார் 3 ஆயிரம் வாகனங்கள் வந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
வருகை தந்தோரில் 30 வயதுக்கு கீழுள்ள இளைஞர்கள் அதிகளவில் இருந்தனர். ஏராளமான இளம்பெண்களும் வருகை தந்தனர்.
வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்ததால், மாநாட்டு திடலில் இருந்த பவுன்சர்கள் தண்ணீர் பாட்டில்களை தொண்டர்களை நோக்கி வீசினர்.
இணைய தளவசதிக்காக செல்போன் டவர் அமைக்கப்பட்டு இருந்தாலும் பேசவும், அழைக்கவும் மட்டுமே சிக்னல் கிடைத்தது. இணையதள வசதி 2 கிலோ மீட்டருக்கு பிறகே கிடைத்தது.
தொகுதிக்கு 10 வாட்ஸ் ஆப் குழு அமைத்துள்ள தவெக நிர்வாகிகள், மாநாட்டு நிகழ்வுகளின் படங்களை அனுப்பினாலும், அது சிக்னல் கிடைக்காமல் முடங்கியது.