‘தியாக பூமி’ முதல் ‘சிறைச்சாலை’ வரை - நாட்டுப்பற்றை மையப்படுத்திய படங்கள்


1 / 7
தியாக பூமி: சுதந்திர வேட்கையை முதன் முறையாக தமிழ் சினிமாவில் திரை ஆக்கம் செய்த படம் ‘தியாக பூமி’. 1939-ம் ஆண்டு வெளியான இப்படம் வெறும் நாட்டுப்பற்றை மட்டும் பேசவில்லை. மாறாக, வர்க்க ஏற்றத்தாழ்வு, தீண்டாமை குறித்தும் பேசியது. கர்நாடக இசையமைப்பாளரான பாபநாசம் சிவன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். காந்தி சக்கரத்தை சுழற்றுவது மற்றும் ஊர்வலம் செல்வது போன்ற உண்மையான காட்சிகளுடன் வெளியான இப்படம் வெற்றிகரமாக 22 வாரம் வரை ஓடியது. பின்னர் பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்டது என்பது வரலாறு.
2 / 7
நாம் இருவர்: சுதந்திரம் அடைவதற்குச் சில மாதம் முன்பு ஏ.வி.மெய்யப்பன் செட்டியார் தயாரித்து வெளியிட்ட ‘நாம் இருவர்’ (1947, ஜனவரி) படத்தில் டி.கே. பட்டம்மாள் பாடிய ‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே’ என்ற பாடல் பட்டி தொட்டிகள் எல்லாம் சுதந்திர வேட்கையைத் தூண்டின. இன்றைக்கு அந்தப் பாடலைக் கேட்டாலும் மனதில் தேசபக்தி சுடர்விடும்.
3 / 7
வீரபாண்டிய கட்டபொம்மன்: 1959-ல் நடிகர் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான படம் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’. இந்திய சுதந்திரத்துக்காக வெள்ளையர்களை எதிர்த்த வீரபாண்டிய கட்டபொம்மனின் கதையை அடிப்படையாகக் கொண்டு வெளியானது இந்தப் படம். இதில் சிவாஜியின் நடிப்பும், குறிப்பாக ஜாக்சன் துரையை எதிர்த்து அவர் பேசும், ‘எதற்கு கேட்கிறாய் வட்டி?’ வசனமும் இப்போதும் காண்போரை சிலிர்க்க செய்யும்.
4 / 7
ரோஜா: மணி ரத்னம் இயக்கத்தில் கடந்த 1992-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ரோஜா’. காஷ்மீர் பற்றிய சென்சிடிவான விஷயத்தை இந்தப் படம் கையாண்டிருக்கும். 90ஸ் கிட்ஸுக்கு நாட்டுப்பற்று ஊட்டிய முக்கியப் படமாகவும் திகழ்ந்தது. இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமான படம் இது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளும், பாடல்களும் எப்போதும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மறக்க முடியாதவை.
5 / 7
இந்தியன்: ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘இந்தியன்’ திரைப்படம் கமலின் திரை வாழ்வில் மற்றுமொரு மறக்க முடியாத படம். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் படையில் இருந்தவராக காட்டப்படும் சேனாதிபதி, சுதந்திரத்துக்குப் பின் இந்தியாவில் நடக்கும் ஊழலைக் கண்டு பொங்கி எழுவதுதான் கதை. ஏ.ஆர். ரஹ்மானின் இசை படத்துக்குப் பெரும் பலம். குறிப்பாக, ‘கப்பலேறி போயாச்சு’ பாடல் கேட்போரை மெய்சிலிர்க்க வைக்கும்.
6 / 7
சிறைச்சாலை: 'காலாபானி’ என மலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவான இந்தப் படம் தமிழிலும் ‘சிறைச்சாலை’ என்ற பெயரில் வெளியானது. இந்திய நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர்களை அந்தமான் தீவு சிறையில் அடைத்து வைத்து அப்போதைய பிரிட்டிஷ் அரசு செய்த கொடுமைகளை உணர்ச்சிபூர்வமாக திரையில் கொண்டு வந்த படம்தான் ‘சிறைச்சாலை’.
7 / 7
மதராசப்பட்டினம்: ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகர்கள் ஆர்யா, எமி ஜாக்சன் நடிப்பில் வெளியான படம் ‘மதராசப்பட்டினம்’. ஆர்யா- எமிக்கு இடையேயான காதல்தான் கதையின் மையம் என்றாலும் வெள்ளையர்கள் காலத்தில் அடிமைப்பட்டுக் கிடந்த மதராசப்பட்டினத்தின் கதையை அழகாகத் திரையில் கொண்டு வந்திருப்பார் இயக்குநர்.
x