தாய்ப்பால் நன்மைகள் என்னென்ன? | ஆக.1-7 தாய்ப்பால் வாரம்


1 / 7
உலகிலேயே விலை மதிப்பில்லாத ஓர் உணவுப் பொருள் தாய்ப்பால் தான். மஞ்சள் நிறத்தில் பிசுபிசுப்பாகச் சுரக்கும் சீம்பால்தான் குழந்தைக்கு முதல் உணவு; முதல் தடுப்பூசியும் இதுதான். சீம்பாலில் ‘இம்யூனோகுளோபுலின் ஏ’ எனும் நோய் எதிர்ப்புப் புரதம் இருக்கிறது. குழந்தைக்கு சளி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட எவ்வித நோய்த்தொற்றும் ஏற்படாமல் இது பாதுகாக்கிறது. மற்ற நோய்களுக்கான எதிர்ப்பு ஆற்றலையும் தருகிறது.
2 / 7
சீம்பாலுக்கு அடுத்துச் சுரக்கும் தாய்ப்பாலில் குழந்தைக்குத் தேவையான கொழுப்பு, சர்க்கரை, புரதம், வைட்டமின் ஏ, சி, கால்சியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட எல்லாச் சத்துகளும் அடங்கியுள்ளன. 7–8% கார்போஹைட்ரேட், 87.47 % தண்ணீர், 3.76 % கொழுப்பு, 2.14 % புரதம், 3.76 % லாக்டோஸ், 0.31 % தாதுக்கள் தாய்ப்பாலில் உள்ளன. வைட்டமின்- டி மட்டுமே தாய்ப்பாலில் இல்லை.
3 / 7
குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் தர வேண்டும். சிசேரியன் அறுவைப்பேறு மேற்கொண்ட அம்மாக்கள் மயக்கம் தெளிந்த பின்னர் தாய்ப்பால் கொடுக்கலாம். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு முதல் 6 மாதங்களுக்குத் தண்ணீர் தர வேண்டியதில்லை. குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு ஆரம்ப கட்டத்தில் தேவைப்படும் கொழுப்பு அமிலங்களும் சிஸ்டீன், டாரின் ஆகிய அமினோ அமிலங்களும் தாய்ப்பாலில் மட்டுமே உள்ளன.
4 / 7
தாய்ப்பாலில் உள்ள லைசோசைம் எனும் என்சைம் நோய்க் கிருமிகளை அழித்துவிடுகிறது; உடலிலிருந்து நச்சுகளை வெளியேற்றுகிறது; மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது. உடல் வளர்ச்சி, எலும்பு வளர்ச்சி, தசை வளர்ச்சி, பல் வளர்ச்சி எனக் குழந்தையின் முழுமையான வளர்ச்சிக்கு தாய்ப்பால்தான் உதவ முடியும். அது மட்டுமா? அம்மாவுடனான பாசப் பிணைப்பு தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளிடம்தான் அதிகம்.
5 / 7
தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும் பல நன்மைகள் கிடைக்கின்றன. முக்கியமாக, தாய்ப்பால் தரும்போது கருத்தரிக்கும் வாய்ப்பு குறைகிறது. பிரசவத்துக்குப் பிறகு ஏற்படும் உதிரப்போக்கு கட்டுப்படுத்தப்படுகிறது. மார்பகப் புற்றுநோய், சூலகப் புற்றுநோய் போன்றவை ஏற்படும் ஆபத்து குறைகிறது. தாய்ப்பால் கொடுப்பதால் சுரக்கும் ஹார்மோன்கள் காரணமாக, தாயின் வயிறு சுருங்கி பழைய வடிவத்தைச் சீக்கிரத்தில் பெற முடியும்.
6 / 7
இரண்டு வயது வரை தாய்ப்பால் தருவது முக்கியம். குழந்தைக்கு 6 மாதங்கள் ஆன பிறகு தாய்ப்பாலுடன் தகுந்த இணை உணவுகள் கொடுக்கப்பட வேண்டும். குறைப் பிரசவக் குழந்தைகளுக்கும் எடை குறைவாகப் பிறந்த குழந்தைகளுக்கும், நோயால் நலிவுற்ற கைக்குழந்தைகளுக்கும் தாய்ப்பால் தேவை அதிகம். அதேவேளையில் தாய்ப்பால் அதிகம் சுரந்து மார்பில் கட்டியாகி வலியால் அவதிப்படும் பெண்களும் இருக்கின்றனர். இந்த இரண்டு பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு தாய்ப்பால் வங்கிகளை வளர்த்தெடுப்பதுதான்.
7 / 7
தாய்ப்பால் ஊட்டுவது ஒரு சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்குக் கணவர், குடும்பத்தினரின் ஊக்குவிப்பு மிகவும் அவசியம். சமூகம், பணிபுரியும் இடத்தின் ஆதரவும் மிக அவசியம். போதிய பேறுகால விடுப்பும் சம்பளத்துடன் கூடிய விடுப்பும் கொடுப்பது தாய்ப்பால் ஊட்டுவதை அதிகரிக்கும். தாய்ப்பால் ஊட்டும் அம்மாவுக்குப் போதிய ஊட்டச்சத்து மிகுந்த உணவைக் கொடுப்பதும், போதுமான அளவுக்கு ஓய்வைக் கொடுப்பதும், மன மகிழ்ச்சி நிறைந்த சூழலை அமைத்துக் கொடுப்பதும் குடும்பத்தினரின் கடமை என்பதை வலியுறுத்துகிறது உலக சுகாதார நிறுவனம். | தகவல்கள் - பொதுநல மருத்துவர் கு. கணேசன்
x