தங்கம் ‘சுடும்’ இந்திய நம்பிக்கைகள் @ பாரிஸ் ஒலிம்பிக் 2024


1 / 6
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் வரும் 26-ம்தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவில் இருந்து 16 விளையாட்டுகளில் 113 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதில் துப்பாக்கி சுடுதலில் 21 பேர் களமிறங்குகின்றனர். துப்பாக்கி சுடுதல்அணி குறித்து ஓர் பார்வை..
2 / 6
சிப்ட் கவுர் சாம்ரா: அஜர்பைஜானின் பாகுவில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் மகளிருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷனில் 5-வது இடம் பிடித்ததன் வாயிலாக பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு சிப்ட் கவுர் சாம்ரா தகுதி பெற்றார். மகளிருக்கான 50 மீட்டர் ரைபிள் பிரிவில் 3 பொசிஷனில், உலக சாதனை தற்போது அவர், வசம் உள்ளது. இந்த மைல்கல் சாதனையை சிப்ட் கவுர் சாம்ரா 2022-ம் ஆண்டு ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் படைத்தார். 23 வயதான அவர், அந்த தொடரில் தங்கப் பதக்கம் வென்றதுடன், அணிகள் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் கைப்பற்றியிருந்தார்.
3 / 6
இஷா சிங்: இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய தகுதி சுற்றில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இஷா சிங் தங்கப் பதக்கம் வென்று பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார். 2015-ம் ஆண்டில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தெலங்கானா மாநில சாம்பியன் ஆனார். பின்னர் கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 62-வது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில், காமன்வெல்த் விளையாட்டு மற்றும் இளையோர் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற மனு பாகர் மற்றும் பல பதக்கங்கள் வென்ற ஹீனா சித்து ஆகியோரை தோற்கடித்து 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் தங்கம் வென்றார். அப்போது அவரது வயது 13.2022-ம் ஆண்டு ஹாங்சோ ஆசிய விளையாட்டு போட்டியில் ஒரு தங்கம் மற்றும் 3 வெள்ளிப் பதக்கங்களை வேட்டையாடினார். 2023-ம் ஆண்டு பாகு நகரில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் 2 தங்கப் பதக்கம் வென்றார்.
4 / 6
ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர்: 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷனில் ஜூனியர் பிரிவில் உலக சாதனை படைத்துள்ளார். 2021-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 2023-ம்ஆண்டு ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டதற்காக இந்த ஆண்டின் தொடக்கத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடமிருந்து ஐஸ்வரி பிரதாப்சிங் தோமர் அர்ஜுனா விருதை பெற்றார்.
5 / 6
அர்ஜுன் பாபுதா: சிட்னியில் 2018-ம் ஆண்டு நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பையில் அர்ஜுன் பாபுதா வெண்கலப் பதக்கம் வென்றார். முன்னதாக 2016-ம் ஆண்டு அஜர்பைஜானில் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பைதொடரில் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில்தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றார்.2023-ம் ஆண்டு சாங்வோனில் நடைபெற்றஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன் ஷிப்பில்,அர்ஜுன் பாபுதா 10 மீட்டர் ஏர் ரைபிளில் வெள்ளிபதக்கம் வென்றார். இதன் மூலம் அவர்,பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். அவரது அனுபவமும், திறமையும் இந்திய துப்பாக்கி சுடும் அணிக்கு பலம் சேர்க்கக்கூடும்.
6 / 6
21 பேர் அடங்கிய இந்திய துப்பாக்கி சுடுதல் அணி: பிருத்விராஜ் தொண்டைமான் (ஆடவர் டிராப்), ராஜேஸ்வரி குமாரி, ஷ்ரேயாசி சிங் (மகளிர் டிராப்), அனந்த்ஜீத் சிங் நருகா (ஆடவர் ஸ்கீட்), ரைசா தில்லான், மகேஸ்வரி சவுஹான் (மகளிர் ஸ்கீட்), அனந்த்ஜீத் சிங் நருகா / மகேஸ்வரி சவுஹான் (ஸ்கீட் கலப்பு அணி), சந்தீப் சிங், அர்ஜுன் பாபுதா (ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள்), இளவேனில் வாலறிவன், ரமிதா ஜிண்டால் (மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள்), ஸ்வப்னில் குசலே, ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் (ஆடவர் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்), சிப்ட் கவுர் சாம்ரா, அஞ்சும் மவுத்கில் (மகளிர் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்), சந்தீப் சிங் / இளவேனில் வாலறிவன், அர்ஜுன் பாபுதா/ரமிதா ஜிண்டால் (10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணி), அர்ஜுன் சீமா, சரப்ஜோத் சிங் (ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல்), மனு பாகர், ரிதம் சங்வம் (மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல்), விஜய்வீர் சித்து, அனிஷ் பன்வாலா (ஆடவர் 25 மீட்டர் ரேபிட் ஃபயர் பிஸ்டல்), மனு பாகர், இஷா சிங் (மகளிர் 25 மீட்டர் பிஸ்டல்), சரப்ஜோத் சிங் / மனு பாகர், அர்ஜுன் சீமா / ரிதம் சங்வம் (10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி).
x