டி20 சாம்பியன் இந்தியா... ரோகித், கோலி, பாண்டியா சொன்னது என்ன? - போட்டோ ஸ்டோரி


1 / 9
2023 ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி ‘எதிர் - உச்சக்கட்டக் காட்சி’யாக முடிய, இந்திய அணியின் ஐசிசி கோப்பை கனவு அன்று தகர்ந்தது. ஆனால், அதே ரோகித் - கோலி கூட்டணியில் இப்போது ஐசிசி டி20 உலகக் கோப்பையை தோனிக்குப் பிறகு இந்திய அணி வென்று சாதித்தது. இந்த உலகக் கோப்பைக்காகத்தான் காத்திருந்தது போல் ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் சர்வதேச டி20-யிலிருந்து ஒய்வு அறிவித்தனர். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் வென்று, இந்திய வீரர்கள் உலக சாம்பியன்களான பிறகு வெளிப்படுத்திய கருத்துகள் வருமாறு:
2 / 9
ரோகித் சர்மா: “இதை வெற்றிபெற்றேயாக வேண்டும் என்று விரும்பினோம். ஆனால், ஒரு தொடரை வெல்ல வேண்டுமென்றால் அதற்கு பின்னணியில் நிறைய விஷயங்கள் நடக்கும். நிறைய முயற்சிகள், நிறைய சிந்தனைகள் ஒன்றிணைதல் தேவை. நான் உண்மையில் இந்த வீரர்களை எண்ணிப் பெருமைப்படுகிறேன். அணி நிர்வாகத்திலும் எங்களை சுதந்திரமாக வெளிப்படுத்திக் கொள்ள அனுமதித்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தொடர் முழுதுமே எங்கள் கூட்டிணைந்த செயல்பாடு அருமை.”
3 / 9
“இதற்கு முன்பாக ஹை பிரஷர் ஆட்டங்களில் ஆடி தோல்வியின் பக்கம் முடிந்திருக்கிறோம். ஆனால், இன்று அப்படியல்ல, வீரர்களுக்கும் இது நன்கு தெரியும். கடந்த 3-4 ஆண்டுகள் இந்தத் தருணத்துக்காக கடுமையாக வேலை செய்தோம். திரைக்குப் பின்னால் ஏகப்பட்ட விவாதங்கள், உழைப்புகள், சிந்தனைகள், உத்திகள் என்று ஒவ்வொருவரும் பங்களிப்பு செய்தோம்” என்றார் ரோகித் சர்மா.
4 / 9
ஆட்ட நாயகன் விராட் கோலி: “இதுதான் என்னுடைய கடைசி டி20 உலகக் கோப்பை. இதில் என்ன சாதிக்க வேண்டும் என்று வந்தோமோ அதை சாதித்து விட்டோம். ஃபைனல் ஒர் அருமையான கேம். நானும் ரோகித்தும் பேட் செய்ய இறங்கியபோது ரோகித்திடம் நான் சொன்னேன்... ‘ஒரு சில நாளில் ரன் எடுக்க முடியாது என்று தோன்றும், பிறகு இறங்குவோம். விஷயங்கள் தானாகவே நிகழும்’ என்று. கடவுள் மகத்தானவர். நன்றியில் சிரம் தாழ்த்துகிறேன்.”
5 / 9
“அணிக்காக நான் ஓர் இன்னிங்ஸை ஆடி கோப்பையை வென்றது, அதுவும் அணிக்குத் தேவைப்படும்போது செய்வது மனநிறைவை அளிக்கிறது. இதுதான் எனது கடைசி டி20 சர்வதேசப் போட்டி. தோற்றிருந்தால் ஓய்வு அறிவித்திருக்க மாட்டேன் என்பது வெளிப்படையான ரகசியம். சில பிரமாதமான வீரர்கள் காத்திருக்கின்றனர். அவர்கள் கையில் ஒப்படைக்கிறோம்” என்றார் விராட் கோலி.
6 / 9
ஹர்திக் பாண்டியா: “இது எங்களுக்கு பெரிய விஷயம். மிகவும் உணர்ச்சிகரமாக இருக்கிறது. கடினமாக உழைத்து ஆடுகிறோம். ஆனால், ஏதோவொன்று கிளிக் ஆகாமல் போய்க்கொண்டிருந்தது. ஆனால், இன்றைய நாள் தேசமே விரும்பிய ஒன்றை நாங்கள் நிறைவேற்றிக் கொடுத்தோம்.”
7 / 9
“எனக்கு தனிப்பட்ட முறையில் கடந்த 6 மாதங்கள் சரியாக இல்லை. நியாயமற்ற விஷயங்கள் எனக்கு நடந்தன. ஆனால் கடினமாக உழைத்து அணிக்காக ஆடி வெற்றி பெற்றுக்கொடுத்தால் எல்லாம் சரியாகி விடும் என்று நினைத்து தேற்றிக் கொண்டேன். இந்த வெற்றி, கனவு வெற்றி” என்றார் ஹர்திக் பாண்டியா.
8 / 9
அக்சர் படேல்: “உலகக் கோப்பை அணிக்கு நான் தேர்வாகும்போதெல்லாம் காயமடைந்து விடுவேன். இந்த முறை இந்திய அணிக்காக சிறப்பாக எதையாவது செய்ய வேண்டும் என்ற ஆவல் மேலிட்டது. இதை இறுதிப் போட்டியாக நினைக்கவில்லை. இன்னொரு போட்டி என்றே நினைத்து ஆடினேன். நான் இறங்கியபோது அவுட் ஆனால் என்ன ஆகும் என்று நினைக்கவில்லை. பந்தின் தகுதிக்கேற்ப ஆடினேன். ரோகித் சர்மா ஒரு அற்புதமான மனிதர். அவர் அனைவரையும் ஒருங்கிணைத்தார். ராகுல் திராவிட்டும் ‘நீ மகிழ்ச்சியுடன் ஆடு, மற்றபடி தானாக நடக்கும்’ என்று ஊக்குவித்தார்.”
9 / 9
முகமது சிராஜ்: “ஜஸ்ஸி பாய்தான் (பும்ரா) மேட்ச் வின்னர். அவரின் ஒரு ஓவர் மேட்சையே மாற்றி விட்டது. அதுதான் நடந்தது. கடந்த உலகக் கோப்பை கைநழுவியது. ஆனால், இப்போது ஒரு வீரரராக என்னால் நம்ப முடியவில்லை. இந்த அணியில் இருந்ததை ஆசிர்வதிக்கப்பட்ட தருணமாகக் கருதுகிறேன்.”