T20 WC 2024-ல் ‘குரூப் ஏ’ அணிகளின் ‘துருப்புச் சீட்டு’ வீரர்கள்!


1 / 6
ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் 9-வது பதிப்பு வரும் ஜூன் 2 முதல் 29-ம் தேதி அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெறுகிறது. இதில் இடம் பெற்றுள்ள 20 அணிகளும் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா, அயர்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்த அணிகளின் ‘துருப்புச் சீட்டு’ வீரர்கள் குறித்து பார்ப்போம்.
2 / 6
பாபர் அஸம் (பாகிஸ்தான்) - கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்றுடன் வெளியேறியதால் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய பாபர் அஸம், அதன் பின்னர் சில மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். டி 20 வடிவில் பாபர் அஸம் 118 ஆட்டங்களில் 41.10 சராசரியுடன் 3,987 ரன்கள் சேர்த்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 129.91 ஆக உள்ளது.
3 / 6
ஜஸ்பிரீத் பும்ரா (இந்தியா) - 2022-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பையில் காயம் காரணமாக ஜஸ்பிரீத் பும்ரா விளையாடவில்லை. இதன் பின்னர் 2023-ல் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையில் களமிறங்கிய அவர், 11 ஆட்டத்தில் 20 விக்கெட்கள் கைப்பற்றி தாக்கத்தை ஏற்படுத்தினார். டி 20 வடிவில் சமீபத்தில் நிறைவந்த ஐபிஎல் தொடரில் 20 விக்கெட்களை சாய்த்திருந்தார். இதனால் அமெரிக்க மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளின் ஆடுகளங்களில் பும்ரா, மாயங்கள் நிகழ்த்தக்கூடும்.
4 / 6
அலி கான் (அமெரிக்கா) - வேகப்பந்து வீச்சாளரான அலி கான், தொழில்முறை டி 20 போட்டிகளில் பரிச்சயமானவர். கரீபியன் பிரிமீயர் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக் ஆகியவற்றில் விளையாடி உள்ளார். 2016ம் ஆண்டு கரீபியன் பிரிமீயர் லீக்கில் குமார் சங்ககராவை தான் வீசிய முதல் பந்திலேயே போல்டாக்கியதன் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். யார்க்கர் பந்துகளை திறம்பட வீசும் அலிகான், சொந்த நாட்டில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கக்கூடும்.
5 / 6
சாத் பின் ஜாபர் (கனடா) - கேப்டன், பேட்ஸ்மேன், பந்து வீச்சாளர் என பன்முகத்திறனுடன் சாத் பின் ஜாபர் கனடா அணியை வழிநடத்த உள்ளார். இடது கை சுழற்பந்து வீச்சாளரான இவர், 43 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். மட்டை வீச்சில் 19 ஆட்டங்களில் 272 ரன்கள் சேர்த்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 133.99 ஆகும்.
6 / 6
பால் ஸ்டிர்லிங் (அயர்லாந்து) - அயர்லாந்தின் கிரிக்கெட் அணியின் தூணாக திகழ்கிறார் பால் ஸ்டிர்லிங். 33 வயதான அவர், டி 20 வடிவில் 142 ஆட்டங்களில் விளையாடி 3,589 ரன்கள் குவித்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 135.43 ஆக உள்ளது. அயர்லாந்து கிரிக்கெட் வரலாற்றில் டி 20-ல் 3 ஆயிரம் ரன்களை கடந்துள்ள முதல் வீரர் இவர் மட்டுமே. ஆண்ட்ரூ பால்பிர்னியுடனான அவரது வலிமையான கூட்டணி அயர்லாந்தின் வெற்றிக்கு பல்வேறு ஆட்டங்களில் கருவியாக இருந்துள்ளது.
x