கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: நீர் மாசடைந்ததால் மீன்கள் உயிரிழப்பு


கிருஷ்ணகிரி அணை நீர் மாசடைந்த நிலையில் நீர்தேக்கப்பகுதியில் உயிரிழந்து மிதந்த மீன்கள். (அடுத்த படம்) தென்பெண்ணை ஆற்றில் கழிவு நீர் கலப்பு காரணமாக ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் நுரை பொங்க வெளியேறி வருகிறது.

கிருஷ்ணகிரி / ஓசூர்: கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று நீர்வரத்து விநாடிக்கு 1,126 கனஅடியாக அதிகரித்தது. இதனிடையே, நீர் மாசடைந்த நிலையில் மீன்கள் உயிரிழந்து மிதந்தன.

கிருஷ்ணகிரி அணைக்குக் கடந்த மார்ச் 9-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை மற்றும் மார்ச் 31-ம் தேதி முதல் மே 6-ம் தேதி வரை என மொத்தம் 37 நாட்கள் நீர்வரத்து முற்றிலும் நின்றது. இதனால், அணையின் நீர்மட்டம் படிப்படியாக சரிந்தது. இதனிடையே, கடந்த வாரத்தில் தென்பெண்ணை நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த பரவலான மழையால், மே 7-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை 3 நாட்கள் அணைக்கு நீர்வரத்து இருந்தது. பின்னர் மே 10-ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 5 நாட்கள் நீர்வரத்து முற்றிலும் நின்றது.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பெய்த மழையால் கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று காலை நீர்வரத்து விநாடிக்கு 1,126 கனஅடியாக இருந்தது. அணையிலிருந்து இடது மற்றும் வலதுபுற வாய்க்காலில் விநாடிக்கு 12 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நேற்று நீர்மட்டம் 40.20 அடியாக இருந்தது.

மேலும், நீண்ட நாட்கள் அணைக்கு விட்டு, விட்டு நீர்வரத்து இருந்த நிலையில் நேற்றைய நீர்வரத்தில் நீர் மாசடைந்த நிலையில் கடும் துர்நாற்றத்துடன் இருந்தது. இந்த நீரால் அணையில் 3 டன் மீன்கள் வரை உயிரிழந்து மிதந்தன. ஆக்சிஜன் குறைபாடு காரணமாக மீன்கள் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிகிறது.

கெலவரப்பள்ளி அணை: ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று காலை நீர்வரத்து விநாடிக்கு 155 கனஅடியாக இருந்தது. அணையிலிருந்து 560 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 44.28 அடியில் நீர்மட்டம் 28 அடியாக இருந்தது. மேலும், தென் பெண்ணை ஆற்றில் ரசாயன கழிவு கலப்பு காரணமாகக் கடந்த 3 நாட்களாக அணைக்கு நீர்வரத்து நுரை பொங்க வருகிறது. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

x