கோவை: பேரூரில் 4 ஆண்டுகளாக தொடரும், தர்ப்பண மண்டபம் கட்டுமான பணியை விரைவில் முடித்து ஜூன் மாதம் திறக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை பேரூரில் பட்டீசுவரர் கோயிலை ஒட்டியுள்ள நொய்யலாற்றின் படித்துறையில், உயிரிழந்தவர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது பொதுமக்களின் வழக்கம். ஆடி, புரட்டாசி, தை உள்ளிட்ட முக்கிய மாதங்களில் வரும் அமாவாசை தினங்களில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காக இங்கு ஏராளமான எண்ணிக்கையில் பொதுமக்கள் வந்து செல்வர். இங்கு பக்தர்களுக்கு உரிய வசதிகள் செய்து கொடுப் பதற்காக, கடந்த 2020-ம் ஆண்டு பட்டீசுவரர் கோயிலுக்கு சொந்தமான மூன்று ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் ரூ.12 கோடி மதிப்பில் தர்ப்பண மண்டபம் கட்டும் பணி அரசு சார்பில் தொடங்கப்பட்டது.
இப்பணி இன்னும் தொடர்ந்து வருகிறது. 4 ஆண்டுகளாக தொடரும் கட்டுமான பணியை விரைந்து முடித்து, பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘இந்த இடத்தில் ஒரே அளவில் மொத்தம் 50 மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. பெரும் சதவீத கட்டுமானப் பணிகள் முடிந்து விட்டன. தரைத்தளம் அமைத்தல், மண்டப சுவர்களுக்கு வர்ணம் பூசுதல் உள்ளிட்ட இறுதி கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொது மக்களுக்கான கழிப்பறை, காத்திருக்கும் இடம், பசு மடம், வாகனம் நிறுத்தும் இடம், காக்கைக்கு படையல் வைக்கும் இடம் என தர்ப்பணம் கொடுக்க தேவையான மற்றும் மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. ஜூன் மாதத்துக்குள் பணிகளை முடித்து மண்டபத்தை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது’’என்றனர்.