‘தலைமைச் செயலகம்’ தொடருக்காக இந்தியா முழுவதும் அலைந்தேன்: இயக்குநர் வசந்தபாலன்


சென்னை: வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர், ‘தலைமைச் செயலகம்’. ராடன் மீடியாவொர்க்ஸ் சார்பில் ராதிகா சரத்குமார் தயாரித்துள்ளார். 8 எபிசோடுகள் கொண்ட அரசியல் வெப் தொடரான இதில், கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, ஆதித்யா மேனன், பரத் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜீ 5 தளத்தில் நாளை வெளியாக இருக்கிறது.

இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் வசந்தபாலன் கூறும்போது,“ ராதிகா சரத்குமார் இதன் கதையை சொன்னபோது இதைத் தமிழ்நாட்டில் செய்ய முடியாது, வேறுமாதிரி திரைக்கதை செய்கிறேன் என்றேன். ஒப்புக்கொண்டார். ஜெயமோகனுடன் இணைந்து நான் செய்த திரைக்கதை, சரத்குமார் சாருக்கு பிடித்துவிட்டது. எல்லா கதைகளிலும், முதல்வர் கெட்டவர். ஆனால் இதில் ஊழல் குற்றம் சாட்டப்பட்ட நல்லவராகக் காட்டினேன். நிறைய புதுமையாக முயற்சித்துப் பார்த்தோம். இந்தியா முழுவதும் இந்த சீரிஸிற்காக அலைந்தேன். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டால், தமிழகம் மிகப்பெரிய அளவில் முன்னேறியிருக்கிறது. அங்கு இல்லாத நியாயமும் சமதர்மமும் இங்கே இருக்கிறது. அதை இங்கே ஆண்ட அரசாங்கங்கள் உறுதி செய்திருக்கின்றன. அதை இந்த சீரிஸில் சொல்ல ஆசைப்பட்டேன். அதைச் சாத்தியமாக்கியிருக்கிறோம் என நம்புகிறேன்” என்றார்.

ராதிகா, சரத்குமார், தொடரில் நடித்த ஸ்ரேயா ரெட்டி, பரத், ஆதித்யா மேனன், நிரூப், கவிதா பாரதி, சந்தான பாரதி, தர்ஷா குப்தா உட்பட பலர் பேசினர்.

x