ஆண்டிபட்டி: தொடர் மழையால் தேனி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பழநியிலும் கோடை விதைப்பு தொடங்கி உள்ளது.
தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. சுட்டெரிக்கும் வெயிலால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு காய்கறி பயிர் விதைப்பில் தாமதம் ஏற்பட்டது. கோடை மழை தொடங்கிய பின்பு வேளாண் பணிகளை மேற்கொள்ள விவசாயிகள் திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதைத் தொடர்ந்து ஆண்டிபட்டி, கதிர்நரசிங்கபுரம், கணேசபுரம், கண்டமனூர், அரப்படித் தேவன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெங்காயம் நடவு செய்யும் பணி தொடங்கியது.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், மழையை எதிர் பார்த்து ஏற்கெனவே கோடை உழவு செய்திருந்தோம். தற் போதைய மழையால் நிலத்தின் ஈரத்தன்மை அதிகரித்துள்ளது. எனவே, வெங்காயம் நடவு செய்து வருகிறோம். 60 நாட்களில் பலன் தரும். தொடர் மழை பெய்வதால் துளிர்விட்டு விரைவில் வளர்ந்து விடும் என்று கூறினர்.
பழநி: பழநி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர் சாகுபடி அதி களவில் நடக்கிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மித மான கோடை மழை பெய்து வருகிறது. இதனால் மகிழ்ச்சியில் உள்ள விவசாயிகள் நெல், மக்காச் சோளம் உள்ளிட்ட பயிர்களை நடவு செய்வதற்காக காளை மாடுகள், டிராக்டர் உதவியுடன் நிலத்தை உழுது சமன் செய்து வருகின்றனர்.
நிலத்தை தயார் செய்து பயிர்களை நடவு செய் யும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கோடை மழை பெய்து வருவதால் வயலை தயார் செய்யும் பணி நடக்கிறது. தொடர்ச்சியாக மழை பெய்தால் விவசாயம் செழிக்கும் என்றனர்.