அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் எம்.தண்டா மலைக் கிராம மக்கள்

By KU BUREAU

தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே எம்.தண்டா மலைக் கிராம மக்கள் அடிப்படை வசதிகளின்றி தவித்து வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் சுஞ்சல் நத்தம் ஊராட்சிக்கு உட்பட்டது எம்.தண்டா கிராமம். ஏரியூரில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் சிறிய மலை மீது அமைந்துள்ள இந்த கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஏரியூர் பகுதியைச் சேர்ந்த மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த பயனாளிகள் 72 பேருக்கு கடந்த 2013-ம் ஆண்டு இந்த மலைப் பகுதியில் தமிழக அரசால் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது.

பட்டா பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் மனைகளில் சிறிய குடிசைகளையும், வீடுகளையும் அமைத்து வாழ்ந்து வருகின்றனர். தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டுமென இவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து, கிராம மக்கள் சிலர் கூறியது: எங்கள் குடியிருப்புப் பகுதிக்கு சாலை, மின்சாரம், குடிநீர் ஆகிய வசதிகள் கோரி அரசு அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்து கோரிக்கை வைத்தோம். அதன் தொடர்ச்சியாக சில ஆண்டுகளுக்கு முன்பு கரடு முரடான மண் சாலை ஓரளவு சீரமைக்கப்பட்டு, சாலையோரங்களில் மின் கம்பங்களும் நடப்பட்டன. ஆனால், அதன் பின்னர் தார்சாலையும் அமைக்கப்படவில்லை, மின் இணைப்புகளும் ஏற்படுத்தப்படவில்லை.

எனவே, வீடுகளில் இரவில் சோலார் மின் விளக்குகளைத் தான் பயன்படுத்தி வருகிறோம். 2 கிலோ மீட்டர் நடந்து சென்று குடிநீர் எடுத்து வருகிறோம். அதேபோல, துணிகளை துவைக்கவும், குளிக்கவும் வாரம் ஒருமுறை சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாகமரை காவிரியாற்றுப் பகுதிக்கு சென்று திரும்புகிறோம். அவசர உதவிகளுக்கு ஆம்புலன்ஸ் சேவையை அழைத்தாலும் கரடுமுரடான பாதையால் ஓட்டுநர்கள் வர முடியாமல் தவிக்கின்றனர்.

சாலை வசதியை காரணம் காட்டி எங்கள் கிராம குழந்தைகளில் பலரும் பள்ளி செல்வதில்லை. இதையெல்லாம் கவனத்தில் கொண்டு சாலை, மின்சாரம், குடிநீர் வசதிகளை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும். மேலும், எங்கள் பகுதியில் வசிப்பவர்கள் அனைவரும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் என்பதால் அனைவருக்கும் அரசு சார்பில் வீடு கட்டித் தர வேண்டும். இவ்வாறு கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE